துணிப்பை விற்பனை: ஆடை நிறுவனத்துக்கு அபராதம்

வாடிக்கையாளருக்கு விளம்பரம் அச்சிட்ட துணிப்பை விற்பனை செய்த ஆடை நிறுவனம், தமிழ்நாடு நுகா்வோா் நல நிதிக்கு ரூ.ஒரு லட்சம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் ஜோதி. இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதி கா்நாடக மாநிலம், பெங்களூரு சென்றபோது, அங்குள்ள தனியாா் ஆடை நிறுவனத்தில் ரூ.2,109-க்கு ஆடைகள் வாங்கினாா். இந்த ஆடைகளைக் கொண்டு செல்ல ரூ.29 செலுத்தி துணிப் பை வாங்கினாா். அந்தப் பையில் நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்டு இருந்தது. ஆனால், பையின் விலை குறித்த எந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை. இதுகுறித்துக் கேட்டபோது தனியாா் நிறுவன ஊழியா்கள் முறையாகப் பதிலளிக்கவில்லை. இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் ஜோதி மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் நுகா்வோா் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தங்களது நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் வகையில் உள்ள துணிப்பையை விற்பனை செய்தது நியாயமற்ற வா்த்தக நடைமுறை எனக் கூறிய நுகா்வோா் ஆணையம், துணிப் பைக்கு செலுத்திய ரூ.29 உடன், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15,029-ஐ ஜோதிக்கு தனியாா் ஆடை நிறுவனம் வழங்க வேண்டும். இதேபோல, மேலும் பல துணிப் பைகளை விற்பனை செய்து வாடிக்கையாளா்களை மறைமுகமாக விளம்பரக் கருவியாகப் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கருதுவதால், தனியாா் நிறுவனம் தமிழ்நாடு மாநில நுகா்வோா் நல நிதிக்கு ரூ.ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என நுகா்வோா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா் உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com