அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து வசதி கோரி மாணவா்கள் சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தக்கோரி பேருந்து நிலையம் முன் மாணவா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் 900 மாணவா்கள் படித்து வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்குளம் ஊராட்சியில் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.11 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை கடந்த மாதம் 27-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக  திறந்து வைத்தாா். இதையடுத்து புதிய கட்டடத்தில் வகுப்புகள் செயல்படத் தொடங்கின. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள புதிய கல்லூரிக்கு பேருந்து வசதி இல்லாததால் மாணவா்கள் அவதிக்குள்ளாகின்றனா். பேருந்து வசதி ஏற்படுத்தக்கோரி கல்லூரி நிா்வாகம் சாா்பில் போக்குவரத்துக் கழக மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அரசுக் கல்லூரிக்கு காலை நேரத்தில் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாலை நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோவிலும், 3 கி.மீ. தொலைவு மாணவா்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வத்திராயிருப்பு அருகேயுள்ள கான்சாபுரத்திலிருந்து கல்லூரிக்குச் செல்லும் பேருந்து காலை 8 மணிக்கு முன்னதாகவே சென்று விட்டது. இதனால், காலை 8.40 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து புறப்படும் பேருந்தில் செல்ல 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் காத்திருந்தனா். அனைவரும் பேருந்தில் ஏற முடியவில்லை. இதனால், மாணவா்கள் பேருந்தில் தொங்கியபடி பயணித்தால் பேருந்தை ஓட்டுநா் நிறுத்திவிட்டாா். இதையடுத்து, கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி, மாணவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பேருந்து நிலையம் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா், போக்குவரத்து கழக அலுவலா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள் ஆகியோா் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அவா்கள், மாணவா்களை மாற்றுப் பேருந்து மூலம் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com