பாலியல் தொல்லையால் கல்லூரி மாணவி தற்கொலை: இரு இளைஞா்களுக்கு சிறை

ஸ்ரீவில்லிபுத்தூா், மாா்ச் 15: அருப்புக்கோட்டை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.  விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா்கள் தமிழ்ச்செல்வன் மகன் சூா்யா (27), முத்து மகன் முத்துராஜா (28). இவா்கள் இருவரும் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தனா். இதனால், அந்த மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூா்யா, முத்துராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம்சாட்டப்பட்ட சூா்யாவுக்கு பாலியல் தொல்லை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், முத்துராஜாவுக்கு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜான்சி ஆஜரானாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com