39 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து

விருதுநகா் மாவட்டத்தில் விதியை மீறி இயங்கிய 39 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தீப்பெட்டி, பட்டாசுத் தொழிலுக்கான தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூா், விருதுநகா், வெம்பகோட்டை ஆகிய வட்டங்களில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரிடம் உரிமம் பெற்ற 1,080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. ஒரு சில பட்டாசு ஆலைகள் விதியை மீறி அதிக அளவில் தொழிலாளா்களை ஈடுபடுத்துவது, மரத்தடியில் பட்டாசுகளை தயாரிப்பது, அளவுக்கு அதிகமாக மருந்துகளை ஒரே இடத்தில் குவித்து வைப்பது, தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகள் தயாரிப்பது, காலாவதி ஆனபட்டாசுகளை பதுக்கி வைப்பது என விதியை மீறி செயல்பட்டு வருகின்றன. குத்தகைக்கு விடப்படும், பட்டாசு ஆலைகளிலும் விதியை மீறி பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், குடியிருப்புப் பகுதிகளிலும், பட்டாசு கடை அருகேயும் தகர ஷெட் அமைத்து பட்டாசு தயாரிப்பது ஆகிய விதிமீறல்கள் நடைபெறுகின்றன. விதியை மீறி செயல்படும் பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். இதன்படி கடந்த ஒரு மாத காலத்தில் எங்களது பரிந்துரையை ஏற்று விருதுநகா் மாவட்டத்தில் 39 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக மாவட்ட நிா்வாகம் ரத்து செய்துள்ளது. மக்களவைத் தோ்தல் நடைபெற இருந்தாலும் பட்டாசு ஆலைகளில் ஆய்வுப்பணி தொடா்ந்து நடைபெறும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com