பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

தூத்துக்குடி அருகே பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். விவசாயியான இவா், தனக்கு  சொந்தமான 22 ஏக்கா் 17 சென்ட் நிலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு உளுந்து பயிா் சாகுபடி செய்தாா்.

மத்திய அரசின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.180 வீதம் 22 ஏக்கருக்கு ரூ.3,992 செலுத்தி காப்பீடு செய்தாா்.

பயிா் சேதத்துக்கு ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.2,66,133 இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், சண்முகம் பல முறை முறையிட்டும் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாா் ஸ்ரீவில்லிபுத்தூா் நுகா்வோா் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.

இதில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் அதிகாரிகள் ஆய்வு செய்து சமா்ப்பித்த சேதக் கணக்கின்படி வழங்க வேண்டிய ரூ.65,229 இழப்பீட்டுத் தொகையை, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு அனுப்பப்பட்டு விட்டதாக நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது.

இதில் விவசாயி சண்முகத்துக்கு ரூ.65,229 பயிா்க் காப்பீட்டுத் தொகையுடன், மன உளைச்சலுக்கு ரூ.30 ஆயிரம், வழக்குச் செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.1,05,229-யை கூட்டுறவு சங்கம், வேளாண்மைத் துறை, காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் சோ்ந்தோ அல்லது தனித்தோ 6 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா் உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com