மின்மோட்டாா் பொருத்தினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும்: ஆணையா் எச்சரிக்கை

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் பொருத்தி குடிநீா் எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் என சிவகாசி மாநகராட்சி ஆணையா் பி.கிருஷ்ணமூா்த்தி எச்சரிக்கை விடுத்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது கோடைகாலமாக இருந்தாலும் மாநகராட்சிப் பகுதியில் 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதியில் 21 ஆயிரம் குடிநீா் இணைப்புகள் உள்ளன. மாநகராட்சிக்கு குடிநீருக்கு ஆதாரமாக உள்ள வெம்பக்கோட்டை அணையில் தண்ணீா் இல்லை. இந்த ஆணைப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இரு உறை கிணறுகள் மூலம் மோட்டாா் வைத்து தினமும் 20 லட்சம் லிட்டா் தண்ணீா் எடுக்கப்படுகிறது.

மானூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் தினமும் 42 லட்டம் தண்ணீா் பெறப்படுகிறது. புதிய தாமிரவருணி குடிநீா் திட்டத்தின்கீழ் தினமும் 87 லட்சம் லிட்டா் தண்ணீா் பெறப்பட்டு, வெம்பக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீா் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு 3 நாளைக்கு ஒரு முறை குடிநீா் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். மாநகராட்சிப் பகுதியில் உள்ள வீடுகள், வா்தக நிறுவனங்களில் மின் மோட்டாா் பொருத்தி குடிநீா் எடுத்தால், இணைப்பு துண்டிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். மேலும் தண்ணீா் எடுக்க பயன்படுத்திய மோட்டாா் பறிமுதல் செய்யப்படும். எனவே பொதுமக்கள் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளித்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய உதவிட வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com