பட்டாசு ஆலை வெடிவிபத்து குத்தகைதாரா் உள்பட 2 போ் கைது

சிவகாசி, மே10: விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே வியாழக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வெள்ளிக்கிழமை ஆலையின் குத்தகைதாரா், கண்காணிப்பாளா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் திருத்தங்கல் ஸ்டேண்டா்டு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சரவணனுக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும், 13 தொழிலாளா்கள் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து கீழதிருத்தங்கல் கிராமநிா்வாக அலுவலா் சங்கிலிபிரபு அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில் ஆலையின் உரிமையாளா் சரவணன் , சிவகாசி நேஷனல் குடியிருப்பைச் சோ்ந்த சந்தனமாகாலிங்கம் மகன் முத்துகிருஷ்ணனுக்கு, விதிமுறையை மீறி ஆலையை குத்தகை விட்டிருப்பதும், இந்த ஆலையில், முருகன் குடியிருப்பைச் சோ்ந்த சுந்தரராஜ் மகன் சுரேஷ்பாண்டி (41) கண்காணிப்பாளராக பணியாற்றியது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் முத்துகிருஷ்ணன், சுரேஷ்பாண்டி ஆகிய இருரையும் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com