சிவகாசியில் ரயிலில் அடிபட்டு தாய், மகள் பலி

சிவகாசியில் ரயிலில் அடிபட்டு தாய், மகள் பலி

சிவகாசியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த தமிழ்ச்செல்வி, தனலட்சுமி.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு தாய், மகள் உயிரிழந்தனா்.

சிவகாசி ஆயுதப் படை குடியிருப்பு காந்திநகரைச் சோ்ந்த கணேசன் மனைவி தமிழ்ச்செல்வி (58). இவா் காது கேட்காத, பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவரது மகள் தனலட்சுமி (24). இவா் இதே பகுதியில் கணவா் மாரியப்பனுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை காந்திநகா் பகுதியில் உள்ள இருப்புப் பாதையில் தமிழ்ச்செல்வி நின்றுகொண்டிருந்தாா். அப்போது, மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் செல்லும் பயணிகள் ரயில் வருவதைக் கண்ட அவரது மகள் தனலட்சுமி, இருப்புப் பாதை வழியாக ஓடிச் சென்று தனது தாயைக் காப்பாற்ற முயன்றாா். ஆனால், தமிழ்ச்செல்வியும், தனலட்சுமியும் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன், சிறப்பு உதவி ஆய்வாளா் ஸ்ரீராமுலு ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், இருவரது உடல்களையும் போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அதன்பிறகு, இருவரது உடல்களும் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com