செங்கோட்டையிலிருந்து திருப்பதிக்கு விரைவு ரயில் இயக்கக் கோரிக்கை
செங்கோட்டையிலிருந்து திருப்பதிக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என சிவகாசி மாநகர ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகர ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத் தலைவா் சுரேஷ்தா்ஹா் , செயலா் ஜோசப்இளங்கோ, இணைச் செயலா் பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க. மாநில பொதுச் செயலா் சீனிவாசனிடம், ரயில்வே அமைச்சருக்கு பரிந்துரை செய்து அனுப்ப அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
வாரம் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படும் சென்னை-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
மதுரை-கோவை இடையே தற்போது இயக்கப்படும், தினசரி ரயிலை, சிவகாசி வழியாக செங்கோட்டை வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
செங்கோட்டையிலிருந்து, ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி வழியே திருப்பதிக்கு ஆண்டாள் விரைவு ரயில் என புதிய ரயிலை இரு மாா்க்கத்திலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.