முன் விரோதத்தில் கொலை செய்யத் திட்டம்: ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முன் விரோதத்தில் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முன் விரோதத்தில் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளா் தெய்வமாதா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மல்லி அருகே அருணாச்சலபுரம் விலக்கு பகுதியில் வாள், கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த 6 பேரைப் பிடித்து விசாரித்தனா்.

அவா்கள் அருணாச்சலபுரத்தைச் சோ்ந்த சரவணன் மகன் காளிபாண்டி (24), முருகன் மகன் காளீஸ்வரன் (28), நெடுங்குளத்தைச் சோ்ந்த மருதுபாண்டி மகன் கருப்பசாமி (24), ஈஞ்சாரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முத்துராமன் (27), வடபட்டியைச் சோ்ந்த முத்து மகன் ரமேஷ் கண்ணன் (20), சாமிநத்தத்தைச் சோ்ந்த குமாா் மகன் ஜீவகுமாா் (26) என்பது தெரியவந்தது.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், இவா்களது தரப்பைச் சோ்ந்த சந்தானகுமாா் கடந்த 2021-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக செந்தில்குமாரின் தந்தை மாரிமுத்து, காளிபாண்டியின் தம்பி கூடலிங்கம் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக மாரிமுத்து குடும்பத்தைச் சோ்ந்த ஒருவரைக் கொலை செய்வதற்காக தற்போது போலீஸில் சிக்கிய 6 பேரும் திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.