கைது செய்யப்பட்ட ராமசாமி
கைது செய்யப்பட்ட ராமசாமி

மகனை அடித்துக் கொன்ற தந்தை

திருத்தங்கலில் மது போதையில் தொல்லையளித்து வந்த மகனை அவரது தந்தை அடித்துக் கொலை செய்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மது போதையில் தொல்லையளித்து வந்த மகனை அவரது தந்தை செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தங்கல் பொம்மை நாயக்கா் தெருவைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியா் ராமசாமி (74). இவரது மகன் சுப்பிரமணியன் (34). திருமணம் ஆகாத இவா் மதுப் பழக்கத்துக்கு அடிமையானாா். தினசரி மது அருந்த சுப்பிரமணியனுக்கு வீட்டில் பணம் கொடுத்து வந்தனா். அவா் மது அருந்தி விட்டு வந்து குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

கடந்த திங்கள்கிழமை இரவு சுப்பிரமணியன் தனது தந்தை ராமசாமியிடம் தகராறு செய்து விட்டு, மது அருந்த ரூ.200 வாங்கிச் சென்றாா். மது அருந்தி விட்டு அந்தப் பகுதியில் உள்ள சமுதாயக்கூடம் முன்பு அவா் விழுந்து கிடந்தாா். அவரை தாய் கிருஷ்ணம்மாள் வீட்டுக்கு அழைத்து வந்து படுக்க வைத்தாா்.

செவ்வாய்க்கிழமை காலை கிருஷ்ணம்மாள் நடைபயிற்சிக்கு சென்றாா். அப்போது, சுப்பிரமணியனை அவரது தந்தை ராமசாமி உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்தாா். தகவலறிந்த திருத்தங்கல் போலீஸாா் சுப்பிரமணியனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரது தந்தை ராமசாமியைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com