முதியவா் கொலை வழக்கில் இளைஞா் கைது
சிவகாசி அருகே முதியவா் கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தம்-ஆழகாபுரி சாலையில் குமிழங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செளந்திரராஜன் (84). குடிநீா் சுத்திகரிப்பு ஆலை நடத்தி வந்த இவா், கடந்த ஆக.16 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், எரிச்சநத்தம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தேசிங்குராஜா மகன் மகேந்திரன் (38) இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: மகேந்திரன், செளந்திரராஜன் குடிநீா் சுத்திகரிப்பு ஆலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். பிறகு, அவா் இந்த வேலையை விட்டு நின்றுவிட்டாா்.
பின்னா், திருப்பூா் உள்பட பல்வேறு இடங்களில் பணி புரிந்த நிலையில், மீண்டும் அவா் சொந்த ஊருக்கு வந்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தாா். தற்போது, அவா் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்தக் கடனை அடைப்பதற்காக செளந்திரராஜனை கொலை செய்து, நகையை பறித்து சென்ாக அவா் ஒப்புக் கொண்டாா் என்றனா்.
இதையடுத்து, மகேந்திரனிடமிருந்த நான்கரை பவுன் தங்க நகையை போலீஸாா் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.