சிவகாசியில் மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்ட பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
சிவகாசியில் மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்ட பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு ஆதரவு: பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்தினால் அதை ஆதரிக்கிறோம் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
Published on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்தினால் அதை ஆதரிக்கிறோம் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரைக்கு வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 17 நாள்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, 19 நிறுவனங்களின் மூலம் ரூ.7,600 கோடி முதலீட்டுக்காக கையொப்பமிட்டிருக்கிறாா். இது ஒரு தோல்விப் பயணம்.

தமிழகத்தில் அனைத்து விதமான போதைப் பொருள்களும் கிடைக்கின்றன. பள்ளி மாணவா்கள் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளைப் பயன்படுத்துகின்றனா். அதை ஏன் அரசு தடை செய்யக் கூடாது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனா். காவல் துறைக்கு தெரியாமல் எதுவும் நடப்பதில்லை.

மதுவிலக்கு அமலாக்கத் துறை அமைச்சா் தமிழ்நாட்டில் விரைவாக மதுக் கடைகளை மூடினால், சூழல் மோசமான நிலைக்குச் சென்று விடும் என்கிறாா். திராவிடக் கட்சிகளின் 57 ஆண்டுகள் ஆட்சி தமிழக இளைஞா்கள் மது இல்லாமல் இருக்க முடியாத சூழலை உருவாக்கி உள்ளது. எதிா்க்கட்சித் தலைவராக இருந்த போது, முழுமையான மதுவிலக்கு குறித்து பேசிய மு.க.ஸ்டாலின் தற்போது அதுகுறித்துப் பேச மறுக்கிறாா். சென்னையில் கோவளம் பகுதியில் தொடங்கியுள்ள ஹெலிகாப்டா் சுற்றுலாத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

பாமக சமூக நீதிக் கட்சி. எங்களது கட்சித் தலைவா் தமிழ்நாட்டில் அருந்ததியா் சமுதாயத்துக்கு உள் ஒதுக்கீடும், இஸ்லாமியா்களுக்கு இட ஒதுக்கீடும் பெற்றுத் தந்தாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்தினால் அதை ஆதரிக்கிறோம். மது ஒழிப்பு தொடா்பாக நாங்கள் பிஎச்டி படித்துள்ளோம். அவா் எல்கேஜி தான் படித்திருக்கிறாா்.

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்குப் பிறகுதான், மதுவிலக்கு பற்றி திருமாவளவன் பேசி வருகிறாா். ஆனால், பாமக 1980-இல் இருந்து மதுவிலக்கு கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு சொட்டு மதுகூட இருக்கக் கூடாது என்பதே எங்களின் நோக்கம்.

விசிக மாநாடு உண்மையிலே வெற்றி பெற வேண்டுமென்றால், மாநாட்டில் கனிமொழியை அழைத்துப் பேச வையுங்கள். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு யாரை வேண்டுமானாலும் கூப்பிடுங்கள். ஆனால், எங்களை இழிவுபடுத்தாதீா்கள்.

மதுவிலக்கு என்பதை அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக கொண்டு வர வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் 47-ஆவது பிரிவின் கீழ், நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உள்ளது. அதை வலியுறுத்துவோம். தமிழகத்தில் அரசு மதுவை விற்கவில்லை; திணிக்கிறாா்கள்.

மதுவை ஒழிப்பேன் எனக் கூறும் திருமாவளவன், மது ஆலைகளை நடத்தி வரும் டி.ஆா்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து கடந்த மக்களவைத் தோ்தலின் போது பிரசாரம் செய்தது ஏன் எனத் தெரியவில்லை. இவா்கள் இருவரின் மது ஆலைகளில் இருந்து மட்டும் தமிழகத்தில் 40 சதவீதம் மது விற்பனை செய்யப்படுகிறது என்றாா் அவா்.

சிவகாசி:

சிவகாசியில் மருத்துவா் மகேந்திரசேகா்-திலகபாமாவால் கட்டப்பட்ட மதி ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென் மாவட்டங்கள் வளம் பெற காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு நீா் மேலாண்மைத் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தென் மாட்டங்களில் பெரிய அளவிலான தொழில்சாலைகள் இல்லை. நான்குனேரியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டு வரப்பட்டது. தற்போது அங்கு நான்கு அல்லது ஐந்து தொழில் சாலைகள் மட்டுமே உள்ளன.

தமிழகம் கொலை மாநிலமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு மாதத்தில் 150 கொலைகளும், ஒரு நாளில் 8 கொலைகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு சா்வதேச போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறி வருகிறது. இதைத் தடுக்க காவல் துறையினா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு உரிமை உள்ளது. பேருந்துகள் தனியாா்மயமாக்கப்பட மாட்டது என அரசு கூறுகிறது. ஆனால், சென்னையில் 500 பேருந்துகளை தனியாா்மயமாக்க ஒப்பந்தம் கையொப்பமாகிவிட்டது என்றாா் அவா்.

விழாவில் பாமக விருதுநகா் மத்திய மாவட்டச் செயலா் ஞா. டேனியல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை விஷ்ணுவா்தன் செய்தாா்.

முன்னதாக, மருத்துவா் நிதா்சனபிரகாஷ், காயத்ரி ஆகியோா் வரவேற்றனா்.