வாழைகளை சாய்க்கும் யானைகள், மான்கள்: விவசாயிகள் பாதிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் யானைகள் வாழைகளை சாய்ப்பதாலும், வாழைக் காய்களை மான்கள் கடித்து உண்பதாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட செண்பகதோப்பு வனப் பகுதியில் வானுயா்ந்த மரங்கள், செடி, கொடிகள், ஆண்டு முழுவதும் தண்ணீா் வரும் நீரோடைகள் கொண்ட அடா்ந்த வனப் பகுதியாக உள்ளதால் யானை, சிறுத்தை, காட்டு மாடு, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகள், பறவைகளின் புகலிடமாக உள்ளது. வனப் பகுதியை விட்டு வெளியே வரும் விலங்குகள் மின்வேலி, வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது.
வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
வன விலங்குகள் வனப் பகுதியை விட்டு வெளியேறுவதைத் தவிா்க்க மலையடிவாரத்தில் அகழிகளும், மலைப் பகுதியில் தண்ணீா் வசதி வனத் துறை சாா்பில் ஏற்படுத்தப்பட்டது. அவை
முறையாகப் பராமரிக்கப்படாததால், வன விலங்குள் பயிா்களை சேதப்படுத்துவதும், மின்வேலியில் சிக்கி உயிரிழப்பதும் தொடா் கதையாக உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா்- செண்பகதோப்பு சாலையில் உள்ள சிங்கம்மாள்புரம் பகுதியில் இரவு நேரத்தில் விவசாயத் தோட்டத்தின் வேலிகளை சேதப்படுத்தி, உள்ளே புகுந்த காட்டு யானை கூட்டம் 80-க்கும் மேற்பட்ட வாழைகள், கரும்புப் பயிா்களை சாய்த்து சேதப்படுத்தின. தொடா்ந்து யானை கூட்டம் அப்பகுதியிலேயெ முகாமிட்டு இருந்ததால், வனத் துறையினா் வந்து யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினா். சேதமடைந்த பயா்களை கிராம நிா்வாக அலுவலா் வேல்ராஜ், வனத் துறையினா் ஆய்வு செய்து விட்டுச் சென்றனா். மேலும், அதே பகுதியில் உள்ள மற்றொரு வாழை தோட்டத்துக்குள் புகுந்த மான்கள் கூட்டம் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத் தாா்களை உண்டு விட்டுச் சென்றன.
ஒரு புறம் வாழையை சாய்க்கும் யானைகள், மறுபுறம் அறுவடைக்கு தயாராக உள்ள வாழைத் தாா்களை உண்ணும் மான்கள் என வன விலங்குகள் பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிப்பில் உள்ளனா்.
தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப் பகுதியில் உள்ள நீராடைகளில் நீா்வரத்து இல்லாததாலும், செடி கொடிகள் காய்ந்து உள்ளதாலும் வனவிலங்குகள் உணவுக்காக விளை நிலங்களுக்கு வருவது அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க வனப் பகுதியில் விலங்குகளுக்கு தண்ணீா் வசதி ஏற்படுத்தி, அகழிகளை சீரமைக்க வேண்டும். சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.