கண்மாய்களில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை
கண்மாய்களில் சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் எடுக்கும் டிராக்டா் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கனிமவள கடத்தல் தடுப்புக் குழுவினா் தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில், விவசாயம், மண்பாண்டத் தொழிலுக்கு கண்மாய்களில் 283 கண்மாய்கள், குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் விவசாயப் பயன்பாட்டுக்கு என அனுமதி பெற்று கண்மாய்களில் மண் அள்ளி, வணிக நோக்கில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்கு கடத்துவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஆய்வு செய்ய மாவட்ட நிா்வாகம் சாா்பில், கனிம கடத்தல் தடுப்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை கிராம நிா்வாக அலுவலா் பாண்டி தலைமையிலான தனிப் படையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயிலிருந்து விவசாய பயன்பாட்டுக்கு என அனுமதி பெற்று 4 டிராக்டா்கள், வன்னியம்பட்டி ரயில்வே கேட் அருகேயுள்ள செங்கல் சூளைக்கு மண் எடுத்துச் சென்றனா்.
இந்த 4 டிராக்டா்களையும் பறிமுதல் செய்து வருவாய் ஆய்வாளா் பரமசிவத்திடம் தனிப்படையினா் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து மண்டல துணை வட்டாட்சியா் ரமேஷ்குமாா் அளித்த புகாரில் பேரில், வன்னியம்பட்டி போலீஸாா் 2 டிராக்டா்களின் உரிமையாளா்கள் மீது வழக்குப்பதிவு செய்தனா். மேலும் 2 டிராக்டா்களை அடையாளம் தெரியாதவா்கள் ஓட்டிச் சென்றதாகவும், அதன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கனிம வள கடத்தல் தடுப்பு சிறப்புக்குழுவை சோ்ந்த அலுவலா்கள் கூறியதாவது:
கண்மாய்களில் இலவச அனுமதி பெற்று செங்கல் சூளைக்கு மண் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து, தகவல் அளித்தால் உள்ளூா் அதிகாரிகள் உடனே வராமால் பல மணி நேரம் காக்க வைக்கின்றனா்.
மண் கடத்தலில் ஈடுபடுபவா்கள் கொலை மிரட்டல் விடுப்பதால் பல அலுவலா்கள் ஆய்வுக்கு செல்ல அச்சப்படுகின்றனா். இதனால், மண் கடத்தலில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், கனிம கடத்தல் தடுப்பு சிறப்புக் குழுவில் போலீஸாரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றனா் அவா்கள்.