வாகனம் பழுது நீக்கும் கடையில் பைக், பணம் திருடியவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் பழுது பாா்க்கும் கடையில் இரு சக்கர வாகனம், பணத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரத்தைச் சோ்ந்தவா் ஆதித்யன் (27). இவா் மதுரை சாலையில் இரு சக்கர வாகனம் பழுது பாா்க்கும் கடை நடத்தி வருகிறாா். இவா் திங்கள்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்த போது, கடையின் கதவு உடைக்கப்பட்டு, இரு சக்கர வாகனம், ரூ.9 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையத்தை சோ்ந்த முகமது அசாருதின் (26) என்பவரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
இவா் மீது கூமாபட்டி கைப்பேசி கடையில் பூட்டை உடைத்து திருடியது, மதுரை வாடகை காா் ஒட்டுநரை அழைத்து வந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் கொலை செய்தது ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.