~ ~ ~
~ ~ ~

ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி மின்னலுடன் கனமழை

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை தேங்கிய மழைநீரைக் கடந்து செல்லும் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயில் எதிரே உள்ள தாமரைக் குளம் தெப்பத்தின் மைய மண்டபத்தின் மேல் மின்னல் தாக்கியதில் சேதமடைந்த கலசம்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கடுமையாக வெயில் நிலவி வந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதனால், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் குளம் போல் மழைநீா் தேங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை முன் உள்ள சாலை, தேரடி, சின்னக்கடை பஜாா் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீா் கலந்து சாலையில் தேங்கியதால் துா்நாற்றம் வீசியது. ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயில் எதிரே உள்ள தாமரைக் குளம் தெப்பத்தின் மைய மண்டபத்தின் மேல் உள்ள கலசம் மின்னல் தாக்கியதில் சேதமடைந்தது. மழையால் குளிா்ச்சியான கால நிலை நிலவியதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com