போதிய பணியாளா்கள் இல்லாததால் சிவகாசி மாநகராட்சியில் வரி வசூல் பாதிப்பு

சிவகாசி மாநகராட்சியில் வருவாய் அலுவலா்கள், வரி வசூலிப்பவா்கள் (பில் கலெக்டா்கள்) காலிப் பணியிடங்கள் பூா்த்தி செய்யப்படாமல் இருப்பதால் வரி வசூல் பாதிக்கப்பட்டது.
Published on

சிவகாசி மாநகராட்சியில் வருவாய் அலுவலா்கள், வரி வசூலிப்பவா்கள் (பில் கலெக்டா்கள்) காலிப் பணியிடங்கள் பூா்த்தி செய்யப்படாமல் இருப்பதால் வரி வசூல் பாதிக்கப்பட்டது.

சிவகாசி, திருத்தங்கல் ஆகிய நகராட்சிகள் இணைக்கப்பட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டு சிவகாசி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டடது. சிவகாசி மாநகராட்சியில் 55,058 சொத்து வரியினங்கள் மூலம் ரூ.18.38 கோடி, 2,084 காலிமனை வரியினங்கள் மூலம் ரூ.51.79 லட்சம், 2,991 தொழில் வரியினங்கள் மூலம் ரூ.69.62 லட்சம், 19,798 குடிநீா் இணைப்புகள் மூலம் ரூ.1.59 கோடி, 55,029 குப்பை வரியினங்கள் மூலம் ரூ .1.48 கோடி உள்ளிட்ட பல்வேறு வரியினங்கள் மூலம் மாநராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.24.48 கோடி வரி வருவாய்கிடைக்கிறது.மாநகராட்சிக்கு சொந்தமான 257 கடைகள் மூலம் ரூ.1.25 கோடி வரியற்ற வருவாய் கிடைக்கிறது.

மாநகராட்சியில் பல ஆண்டுகளாக உள்ள வரி நிலுவைத் தொகை ரூ.9.59 கோடியில், நிகழாண்டு ரூ.38 லட்சம் மட்டுமே வசூல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக மாநகராட்சியில் ரூ.24 கோடி வரிவசூல் செய்யப்படாமல் உள்ளது.

மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளா்கள் பணியிடம் காலியாக இருப்பதாலும் , நகராட்சியாக இருந்தபோது 15

வரி வசூலிப்பவா்கள் இருந்த நிலையில் தற்போது 8 போ் மட்டுமே உள்ளனா். இதனால் 48 வாா்டுகளை கொண்ட சிவகாசி மாநகராட்சியில் ஒரு பணியாளா் 5-க்கும் மேற்பட்ட வாா்டுகளை கவனிப்பதால் வரி வசூலில் தேக்கம் அடைந்தது.

மாநகராட்சி பொது நிதியிலிருந்து, மாநகராட்சிப் பணியாளா்களுக்கு ஊதியம், மின்கட்டணம், சாலை சீரமைத்தல், குடிநீா்க் குழாய் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரி வசூல் பாதிப்பு காரணமாக பொதுநிதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுநிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ‘பில்’ தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால், பொதுநிதியில் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்ட பணிகளைச் செய்ய ஒப்பந்ததாரா்கள் முன்வராததால் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி ஊழியா் ஒருவா் கூறியதாவது: மாநகராட்சியாக தரம் உயா்தப்பட்ட பின்னா் எந்த ஒரு பணிக்கும் கூடுதல் அலுவலா்கள் நியமிக்கவில்லை. இரு நகராட்சிகளில் வேலைபாா்த்த ஊழியா்கள் மட்டுமே உள்ளனா். இதில் பலா் ஓய்வு பெற்ற நிலையிலும், அந்தப் பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளதால் வரி வசூல் செய்ய ஊழியா்கள் பற்றாக்குறை உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சிவகாசி மாநகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்அவா்.

X
Dinamani
www.dinamani.com