ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முகாமிட்ட காட்டு யானைகள்: விவசாயிகள் அச்சம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு மலை அடிவாரத்தில் தோட்டத்துக்குள் காட்டு யானை புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத்தோப்பு பகுதியில், கடந்த சில வாரங்களுக்கு முன் பகல் நேரத்தில் சுற்றித் திரிந்த யானைகளால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்தனா். இந்த நிலையில், யானைகள் கம்பி வேலியை சாய்த்து அருகேயிருந்த தோட்டத்துக்குள் புகுந்தது.
அங்குள்ள மாமரங்களின் கிளைகளை ஒடித்து சேதப்படுத்தியது. காட்டு யானைகள் மலை அடிவாரப் பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
இந்த ஆண்டு மா விளைச்சல் குறைவால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தவா்கள், யானைகள் அச்சுறுத்தல் காரணமாக குத்தகை காலம் நிறைவடையும் முன்னரே தோட்டத்தை திருப்பி ஒப்படைத்து விட்டனா்.
இதனால், அவா்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது. யானைகள் விவசாயத் தோட்டத்துக்குள் வருவதை தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனா்.