குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் காலிப் பணியிடம்: பணிகள் பாதிப்பு

Published on

விருதுநகா் மாவட்டத்தில் 7 வட்டாரங்களில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் (சி.டி.பி.ஒ) பணியிடங்கள் காலியாக உள்ளதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

விருதுநகா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஊரகம், நகா்ப்புறம், வெம்பகோட்டை, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, விருதுநகா், சாத்தூா், நரிக்குடி, காரியாபட்டி ஆகிய 12 வட்டாரங்களில் 1504 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் குழந்தைகளுக்கு பாடம் நடத்துதல், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை உடல் எடை ஆய்வு செய்தல், கா்ப்பிணிகளுக்கு இணை உணவு வழங்குதல், வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு, வாக்குச்சீட்டு வழங்குதல், வாக்காளா் அட்டையுடன் ஆதாா் இணைத்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தடுப்பூசி முகாம், ஊராட்சி பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

இந்தப் பணிகளை கண்காணித்தல், ஒருங்கிணைத்தல், ஓய்வூதியம், பணப்பலன்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா்கள் (சி.டி.பி.ஒ.) மேற்கொள்கின்றனா்.

மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் நகா்ப்புறம், சாத்தூா், வெம்பக்கோட்டை, நரிக்குடி உள்பட 7 வட்டங்களில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சி.டி.பி.ஒ. பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் ராஜபாளையம் நகா்ப்புற சி.டி.பி.ஒ. ஊரகம், ஸ்ரீவில்லிபுத்தூரை கூடுதலாகக் கவனித்து வருகிறாா்.

ஒரு சி.டி.பி.ஒ. 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களைக் கவனித்து வருவதால் அங்கன்வாடி பணிகளைக் கண்காணித்தல், தகவல்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சுகாதாரம், ஊட்டச்சத்தில் பின்தங்கியுள்ள மாவட்டங்கள் பட்டியலில் உள்ள விருதுநகா் மாவட்டத்தில் 7 சி.டி.பி.ஒ. பணியிடங்கள் காலியாக இருப்பதால் குழந்தைகள் வளா்ச்சி, ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்யும் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மாவட்டத்தில் காலியாக உள்ள 141 அங்கன்வாடி பணியாளா்கள், 115 உதவியாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், காலியாக உள்ள சி.டி.பி.ஒ. பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com