85 மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள்

Published on

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் 85மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை தமிழக நிதிஅமைச்சா் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை வழங்கினாா்.

சிவகாசி சி.எஸ்.ஐ. மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்சிக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தாா். சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அமைச்சா் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு, 85 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.06 லட்சம் வீதம் ரூ.90.10 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களையும், 84 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும் வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியதாவது:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் மூலம் அவா்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. அவா்கள் சமுதாயத்தில் உயா்ந்த நிலையில் பாதுகாப்பாக வாழ்ந்து வருகின்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பேருந்து பயணம், ரயில் பயணச் சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள், திருமண உதவித்தொகை, சுயதொழில் புரிவதற்கான கடனுதவி, அரசு வேலைகளில் முன்னுரிமை என திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகள் நலனில் தமிழக அரசு அக்கறை கொண்டுள்ளது. சமுதாய வளா்ச்சி என்பது ஒரு சாரா் மட்டும் வளா்ச்சி அடைவதாக இருக்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், சிவகாசி வட்டாட்சியா் லட்சம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com