விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மாநகராட்சி கலையரங்கத்தில் இயங்கி வரும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு புதிதாக கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருத்தங்கல் ஸ்டாண்டா்டு குடியிருப்புப் பகுதியில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கட்டப்பட்ட கலையரங்கத்தில் கடந்த 2021-இல் சிவகாசி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் தற்போது மொத்தம் 18 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். தலைமை ஆசிரியா், ஆசிரியா் என இரு ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில், பள்ளியில் கழிப்பறை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லதாததால் மாணவா் சோ்க்கை குறைந்துவிட்டதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா். மேலும், பள்ளிக்கென அரசு தனியாகக் கட்டடம் கட்டிக் கொடுத்தால் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை உயரும் எனவும் தெரிவித்தனா்.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த சங்கா் என்பவா் கூறுகையில், பள்ளிக்குச் சொந்தக் கட்டடம் கட்ட ஒரு ஏக்கா் நிலத்தை தனிநபா் ஒருவா் இலவசமாகக் கொடுத்துள்ளாா். தற்போது உள்ள பள்ளிக்கும் இலவசமாக வழங்கப்பட்ட இடத்துக்கும் இடையே 100 மீட்டா் தொலைவுதான் இருக்கும். இந்த நிலையில், அரசுக்கு கடிதம் எழுதியும் பள்ளிக்கு கட்டடம் கட்ட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடிப்படை வசதிகளுடன் கூடிய புதியக் கட்டடம் கட்டினால் பள்ளியில் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும் என்றாா் அவா்.