கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
ராஜபாளையம் அருகே முன்விரோதத்தில் கூலித் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூா் வடகாசி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் இசக்கிமுத்து (32). கூலித் தொலியானஇவரும், அதே பகுதியைச் சோ்ந்த வீரன் மகன் மாடசாமி (27) என்பவரும் ஒன்றாக வேலை செய்து வந்தனா். இந்த நிலையில், இருவரும் மது அருந்தும்போது ஏற்பட்டத் தகராறில் இசக்கிமுத்து பாட்டிலால் மாடசாமியை குத்தியது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த முன்விரோதத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாடசாமி இசக்கிமுத்துவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். இதுகுறித்து சேத்தூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து மாடசாமியை கைது செய்தனா். இதையடுத்து, வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மாடசாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமாா் தீா்ப்பளித்தாா்.
