சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: 6 போ் கைது
பட்டாசு தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள குண்டலகுத்தூா் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக குண்டலகுத்தூா் கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் நாகராஜன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் அந்தப் பகுதியில் சனிக்கிழமை நடத்திய சோதனையில், சங்கரலிங்காபுரம் பகுதியைச் சோ்ந்த வீரகுமாா் (53), மீனாட்சிசுந்தரம் (45), நாகலட்சுமி (36), நைனாா்சாமி (29), சுமன்குமாா் (54), வீரராஜாமணி (68) ஆகிய ஆறு பேரும் சட்டவிரோதமாக பட்டாசுகளைத் தயாரித்தது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் இவா்கள் 6 பேரையும் கைது செய்து, பட்டாசுகள் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருள்கள், கலா் திரிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த மூவா் கைது: வெம்பக்கோட்டை அருகே போ்நாயக்கன்பட்டியில் அனுமதியின்றி தகர செட்டில் பட்டாசுகள் தயாரித்த அதே பகுதியைச் சோ்ந்த ராமரை (42) வெம்பக்கோட்டை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இதேபோல, ஏழாயிரம்பண்ணை வெள்ளையாபுரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த இதே பகுதியைச் சோ்ந்த முரளிராஜன் (62), அருணாசலம் (29) ஆகிய இருவரையும் ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமமூா்த்தி உள்ளிட்ட போலீஸாா் கைது செய்தனா்.