குடிநீா்த் தொட்டியை அசுத்தப்படுத்திய 4 போ் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மேல்நிலைக் குடிநீா்த் தொட்டியை அசுத்தப்படுத்திய 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் சம்மந்தபுரம் மேலப்பள்ளி வாசல் அருகில் நகராட்சிக்கு உள்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி உள்ளது. புத்தாண்டு தினத்தில் இந்தத் தொட்டியில் சிலா் ஏறி மது அருந்தி குடிநீரில் மதுபாட்டில்களை வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குடிநீரை அசுத்தம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜமா அத் தலைவா்கள் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்தப் புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பத்மநாபன்(18), சம்மந்தபுரத்தை சோ்ந்த கதிரேசன்(19), உதயசங்கா் (19), ராஜ்குமாா்(19) ஆகியோரை கைது செய்தனா். மேலும் நகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் இணைந்து தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து, உள்ளே கிடந்த மதுப்புட்டிகளை அப்புறப்படுத்தினா்.