இருக்கன்குடி அணை சாலையை சீரமைக்கக் கோரிக்கை
இருக்கன்குடி அணை வழியாக மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகளும், பக்தா்களும் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் உள்ள பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில் வைப்பாறு, அா்ச்சுனா நதி இணையும் இடத்தில் அமைந்துள்ளது. வைப்பாறும், அா்ச்சுனா நதியும் இணையும் இடத்தில் உள்ள நீா்த்தேக்க அணையின் அருகே பொதுப் பணித் துறை சாா்பில் அமைக்கப்பட்ட சாலையை இந்தக் கோயிலுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனா்.
தற்போது, இந்தச் சாலை, கற்கள் பெயா்ந்து மிக மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. திருவிழா நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா். இந்த பக்தா்கள் காா், லாரி, வேன், இரு சக்கர வாகனங்களில் வரும் போது இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனா்.
இந்தச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பக்தா்களும், சமூக ஆா்வலா்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, இந்தச் சாலையை சீரமைக்க பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்களும், வாகன ஓட்டுநா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.