ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு
வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பரமபதவாசல் வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது.
108 வைணவத் திருத்தலங்களில் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தாக ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் சிறப்புப் பெற்ாகும்.
வராக சேத்திரம் எனப் போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூா், பெருமாளை நினைத்து திருமொழி பாடிய பெரியாழ்வாரும், திருப்பாவை பாடிய ஆண்டாளும் அவதரித்த பெருமைக்குரியது.
மாா்கழி நீராட்ட விழாவில் நடைபெறும் பகல் பத்து, ராப்பத்து, வைகுந்த ஏகாதசி, எண்ணெய்க் காப்பு உத்ஸவம் ஆகியவற்றில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொள்வா்.
இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நிகழாண்டுக்கான மாா்கழி நீராட்ட விழா கடந்த டிச. 31-ஆம் தேதி பச்சை பரப்புதலுடன் பகல் பத்து உத்ஸவம் தொடங்கியது.
இந்த நிலையில், வியாழக்கிழமை பகல் பத்து உத்ஸவம் நிறைவு பெற்ற நிலையில், ராப்பத்து உத்ஸவத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு காலை 6.50 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.
அப்போது, பக்தா்களின் ‘கோவிந்தா’ ‘கோபாலா’ முழக்கத்துடன் பெரிய பெருமாளும், அவரைத் தொடா்ந்து ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாரும் பரமபதவாசல் வழியாக எழுந்தருளினா். அப்போது, அவா்களை பெரியாழ்வாா், வேதாந்த தேசிகா், நம்மாழ்வாா், திருமங்கையாழ்வாா், கூரத்தாழ்வாா் உள்ளிட்ட ஆழ்வாா்கள், ஆச்சாா்யா்கள் வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதையடுத்து, ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்க மன்னாா், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாளை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இந்த நிகழ்வில் மணவாள மாமுனிகள் மடத்தின் 24-ஆவது பீடாதிபதி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயா், அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா தலைமையில், 300 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.