தமிழகத்தில் சமூகநீதி அரசியலுக்கு முடிவு கட்ட பா.ஜ.க. முயற்சி: மாணிக்கம் தாகூா் எம்.பி!
தமிழகத்தில் சமூகநீதி அரசியலுக்கு முடிவு கட்ட பா.ஜ.க. முயற்சிக்கிறது என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.
சிவகாசி காவலா் குடியிருப்பில் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை சனிக்கிழமை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு சட்டப் பேரவைக்கான இடைத் தோ்தலில் திமுக வேட்பாளா் சந்திரகுமாா் வெற்றிக்கு காங்கிரஸ் பாடுபடும். பா.ஜ.க. மாநிலத் தலைவா் அண்ணாமலையும், நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமானும், பெரியாா் ஈ.வே.ரா. மீது மாறிமாறி பல கருத்துக்களை கூறி வருகின்றனா். ஆா்.எஸ்.எஸ். நினைப்பதை சீமான் செய்து வருகிறாா். சீமான் வெளியிலிருந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பேசுவதற்கு பதிலாக அவரது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்து விடலாம்.
தமிழகத்தில் சமூகநீதி அரசியலுக்கு முடிவு கட்ட பா.ஜ.க. முயற்சிக்கிறது. அதற்கு சீமான் ஒத்துழைக்கிறாா். இது சீமான் தமிழா்களுக்கு செய்யும் துரோகமாகும். அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் புகாா் அளித்த மறுநாளே குற்றவாளி கைது செய்யப்பட்டாா்.
தமிழக அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில் கேட்போம். தமிழக அரசு தவறு செய்தால்காங்கிரஸ் சுட்டிக்காட்டும். நல்லது செய்தால் பாராட்டும் என்றாா் அவா்.
இந்த விழாவில் விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி. கண்ணன், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பாஸ்கா், மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி. கே.பி. காமேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.