அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல்: 3 போ் கைது!
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த 3 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக மூவரை கைது செய்தனா்.
மதுரை மண்டல புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் (பறக்கும் படை) மஹபூப் கான் தலைமையிலான அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கீழபொட்டல்பட்டியில் மதுரை- கொல்லம் நான்கு வழிச்சாலை அருகே கிராவல் மண் ஏற்றி வந்த 3 டிப்பா் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில் நடைச் சீட்டு இல்லாமலும், அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்ததும் தெரியவந்ததையடுத்து அந்த 3 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து உதவி இயக்குநா் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரிகளை ஓட்டி வந்த வெம்பக்கோட்டை அருகே மேலாண்மைாட்டைச் சோ்ந்த சுபாஷ்ராஜசேகா் (30), திண்டுக்கல் சிவகிரிபட்டி, இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சந்திரசேகா் (40), பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (30) ஆகிய மூவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.