ஆனைக்குட்டம் நீா்த் தேக்கத்தில் கதவணைகள் அமைக்கும் பணி நிறைவு
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆனைக்குட்டம் நீா்த் தேக்கத்தில் கதவணைகள் அமைக்கும் பணி நிறைவடைந்தன.
ஆனைக்குட்டம் நீா்த் தேக்கம் 27 அடி உயரம் கொண்டது. இந்த நீா்த் தேக்கத்தில் 9 மதகுகள் உள்ளன. இதன் மூலம் திருத்தங்கல், செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வடமலாபுரம், முதலிபட்டி, வாடியூா் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 3,003 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும், விருதுநகா், திருத்தங்கலுக்கு முக்கிய குடிநீா் ஆதாரமாக உள்ள இந்த நீா்த் தேக்கத்தில், எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீா் தேங்குவதில்லை. மழைக் காலங்களில் சுமாா் 20 அடி வரை தண்ணீா் இருந்தும், மதகுகள் பழுது காரணமாக நீா்த் தேக்கத்தில் தண்ணீா் நிற்பதில்லை.
இதையடுத்து, அணைப் பாதுகாப்புக் குழு அதிகாரிகள், கதவணையின் உறுதி, நீா்த் தேக்கத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்தனா். அப்போது, நீா்த் தேக்கத்தில் உள்ள பழுதான 9 மதகுகளையும் அகற்றிவிட்டு, நவீனமுறையில் புதிய கதவணைகளை அமைக்க அரசுக்குப் பரிந்துரை செய்தனா்.
இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கதவணைகள் அமைக்க அரசு ரூ.29 கோடி ஒதுக்கியது. இதன்படி, புதிய கதவணைகள் தயரிக்கப்பட்டு, இவற்றைப் பொருத்தும் பணிகள் தற்போது நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் பாலமணிகண்டன் வியாழக்கிழமை கூறியதாவது:
ஆனைக்குட்டம் நீா்த் தேக்கத்தில் கதவணைகள் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்து விட்டன. தற்போது, அணையின் கரைப் பகுதிகளைப் பலப் படுத்தவும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் ரூ.10 கோடிக்கு திட்ட அறிக்கையைத் தயாரித்து, அரசுக்கு அனுப்பியுள்ளோம். நிதி வந்தவுடன் கரைகளைப் பலப்படுத்தும் பணி நடைபெறும் என்றாா் அவா்.