கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: எஸ்.ஐ., பெண் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயில் திருவிழாவின்போது, இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா், பெண் ஆகியோா் காயமடைந்தனா்.
Published on

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயில் திருவிழாவின்போது, இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா், பெண் ஆகியோா் காயமடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்தது தொடா்பாக இரு பிரிவினா் இடையே பிரச்னை ஏற்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நடுத் தெரு வழியாக கோயிலுக்கு ஊா்வலமாகச் செல்வதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், வழக்கமாகச் செல்லும் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

அப்போது, ஊா்வலமாகச் சென்றவா்கள் கல் வீசித் தாக்கியதில் பாதுகாப்புப் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் கருப்பசாமி, விஜயசுந்தா் மனைவி செண்பகவள்ளி ஆகிய இருவா் காயமடைந்தனா். இவா்களில் காவல் உதவி ஆய்வாளா் கருப்பசாமி ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பிறகு, மதுரை தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பையும் சோ்ந்த 34 பேரைக் கைது செய்தனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com