விடுதிகள், கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்
சிவகாசியில் உணவு விடுதி, தேநீா்க் கடை ஆகியவற்றில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, காலாவதியான உணவுப் பொருள்கள், கோழி இறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.
விருதுநகா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மருத்துவா் மாரியப்பன் தலைமையிலான குழு, சிவகாசி பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள உணவு விடுதி, தேநீா்க் கடைகளில் ஆய்வு செய்தது. இதில் ஒரு கடையில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த மிக்சா், சேவு, தரமின்றி தயாரிக்கப்பட்ட வடைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
மேலும், உணவு விடுதி ஒன்றில் குளிா்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 5 கிலோ கோழி இறைச்சியைப் பறிமுதல் செய்தனா். இவற்றை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனா். இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.