ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து பேச்சுவாா்த்தைக்குப் பின் விடுவிப்பு!

ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இழப்பீட்டுத் தொகையைத் தருவதாக ஒப்புக்கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டது.
Published on

சாத்தூரில் விபத்து இழப்பீடு வழங்காததால், ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இழப்பீட்டுத் தொகையைத் தருவதாக ஒப்புக்கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சிந்தப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து (47), பட்டாசு ஆலையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் கடந்த 2012-ஆம் ஆண்டு சாத்தூா்-சிவகாசி சாலையில் சென்ற போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் உரிழந்தாா்.

இதையடுத்து, இவரது உறவினா்கள் மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உயிரிழந்த காளிமுத்துவின் குடும்பத்தினருக்கு ரூ.14.59 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என கடந்த 2024-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தாா்.

ஆனால், தற்போது வரை இழப்பீட்டுத் தொகையை போக்குவரத்துக் கழகம் வழங்காததால், சாத்தூா் சாா்பு நீதிமன்ற நீதிபதி முத்துமகாராஜன் உத்தரவின்படி, சாத்தூா் பேருந்து நிலையத்துக்கு வந்த அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நீதிமன்றத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு ரூ. 7 லட்சம் தர ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றம் அரசுப் பேருந்தை விடுவித்தது.

Open in App
Dinamani
www.dinamani.com