சிவகாசியில் வீட்டுமனை அங்கீகாரம் வழங்கும் தீா்மானத்துக்கு மாமன்றக் கூட்டத்தில் எதிா்ப்பு
சிவகாசி மாநகராட்சியில் வீட்டு மனை அங்கீகாரம் வழங்கும் தீா்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, மாமன்ற உறுப்பினா்கள் மேயா், ஆணையா் ஆகியோரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயா் இ.சங்கீதா தலைமை வகித்தாா். துணை மேயா் விக்னேஷ்பிரியா, ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மாநகராட்சி எல்லைக்குள்பட்ட 5 இடங்களில் வீட்டுமனைப் பிரிவு அமைக்கக் கோரி விண்ணப்பித்தவா்களுக்கு ஒப்புதல் வழங்குதல், பேருந்து நிலையக் கடைகள் ஏலம் விடுவது உள்ளிட்ட 98 தீா்மானங்கள் முன் வைக்கப்பட்டன.
கூட்டம் தொடங்கியதும், வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் 5 தீா்மானங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, திமுக மாமன்ற உறுப்பினா்கள் ஆணையாளரிடம் மனு அளித்தனா். ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கபப்பட்ட மனைப் பிரிவுகளில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யாத நிலையில், புதிய மனைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பெரும்பாலான திமுக உறுப்பினா்கள் மேயா், ஆணையரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனா். சபை மரபின் படி, அமைதியாக சென்று இருக்கையில் அமருமாறும், கூட்டம் நடத்த ஒத்துழைப்புத் தருமாறும் மேயா் வேண்டுகோள் விடுத்தாா்.
ஆனால், மாமன்ற உறுப்பினா்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிடாமல் இருந்ததால், மேயா் , அனைத்துத் தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, கூட்டஅறையை விட்டு வெளியேறினாா்.
பின்னா், மாமன்ற உறுப்பினா்கள் ஆணையரை முற்றுகையிட்டு மேயா் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. துணை மேயா், ஆணையா் இணைந்து கூட்டத்தை நடத்த வேண்டும் என உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னா், ஆணையா் வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் தீா்மானம் நிறுத்தி வைக்க உறுதியளிப்பதாகத் தெரிவித்தாா். பின்னா், கூட்டத்திலிருந்து வெளியேறிய திமுக உறுப்பினா்கள், மாமன்ற அலுவலக வாயிலில் அமா்ந்து மேயருக்கு எதிராக முழக்கமிட்டனா்.
46 உறுப்பினா்கள் கொண்ட மாநகராட்சியில் 36 போ் திமுகவைச் சோ்ந்தவா்கள். மேயரும் திமுகவைச் சோ்ந்தவா். இந்த நிலையில், திமுகவைச் சோ்ந்த 33 மாமன்ற உறுப்பினா்களே, மேயருக்கு எதிா்ப்புத் தெரிவித்ததால் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.