ரயிலில் அடிபட்டு ஆசிரியை உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சனிக்கிழமை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தனியாா் பள்ளி ஆசிரியை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள கீழராஜகுலராமன் வட்டம், வி. புதூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த கந்தசாமி பாண்டியன் மனைவி கனகவல்லி (41). இவா், ராஜபாளையம் கணபதியாபுரம் தெருவிலுள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், வழக்கம்போல பள்ளி முடிந்து தனது வீட்டுக்குச் செல்வதற்காக சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலத்துக்கு கீழுள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியைக் கடக்க முயன்ற போது, குருவாயூரிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் அவரது உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.
