மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

அருப்புக்கோட்டை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Published on

அருப்புக்கோட்டை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு, அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவா் மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து, சிறுமியை அவரது தாய் விடுதியில் சோ்த்தாா்.

இந்த நிலையில், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த சிறுமிக்கு மீண்டும் அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்தாா்.

இதுகுறித்து குழந்தைப் பாதுகாப்பு அலுவலா் அளித்த புகாரின் அடிப்படையில், அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தை, குற்றத்தை மறைத்ததாக தாயையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கிலிருந்து சிறுமியின் தாய் விடுவிக்கப்பட்டாா். தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com