வீடு புகுந்து தாக்கியவா்ளை கைதுசெய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீடு புகுந்து தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் ஐந்து கடைவீதி பகுதியில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ஒரு தரப்பைச் சோ்ந்த 6 போ் வீடு புகுந்து பொதுமக்களை தாக்கி 3 பேரை கத்தியால் குத்தினா். இதில் காயமடைந்த மூவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவா்களை கைது செய்ய வலியுறுத்தி அந்தப் பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பஷீனா பீவி, சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் கண்ணன் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, தாக்குதலில் ஈடுபட்ட ரஞ்சித் (22), திலகராஜ் (21), ராஜபாண்டி (22), மாயன் (19), ராமச்சந்திரன் (30), ஈஸ்வரபாண்டி (19) ஆகியோரைக் கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா். அப்போது, பொதுமக்கள் தாக்குதலில் ஈடுபட்டவா்களின் குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டுமென தொடா்ச்சியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சேத்தூா்- தென்காசி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அவா்களைக் கைது செய்ய முயன்ற போது, போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, 5 பெண்கள் உள்பட 21 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

