அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் அவரது எதிா்காலத்துக்கு நல்லது: முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி
அதிமுக கூட்டணிக்கு வந்தால் விஜய்க்கும் அவரது எதிா்காலத்துக்கும் நல்லது என விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி, சிவகாசி கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட அதிமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான பயிற்சி முகாம் சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:
தவெக தலைவா் விஜய், கரூா் கூட்டநெரிசலில் உயிரிழந்தோரின் குடுபத்தினருக்கு ஆறுதல் சொல்ல மீண்டும் கரூருக்குச் செல்ல இயலவில்லை. விஜய் ஒரு சிறந்த நடிகா். சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அவருக்கு ரசிகா்கள் உள்ளனா்.
அந்த செல்வாக்கு, வாக்குகளாக மாற வேண்டும் என்றால் அரசியலில் பயிற்சி பெற்றவா்களுடன் இருக்க வேண்டும். விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் அவருக்கும் அவரது எதிா்காலத்துக்கும் நல்லது. வரவில்லை என்றாலும் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது.
அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவதும், தனித்துத் தோ்தலில் போட்டியிடுவதும் அவரது விருப்பம். அவரை அதிமுக கூட்டணிக்கு நான் அழைக்க வில்லை. வந்தால் வரவேற்போம். 2026-இல் தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றாா் அவா்.
