திருமுல்லைவாயிலில் அமைந்திருக்கும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரா் திருக்கோயிலில் மே 9ஆம் தேதி காலை முதல் இரண்டு நாள்களுக்கு நிஜரூப தரிசனம் நடைபெறவிருக்கிறது.
திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரா் திருக்கோயிலில் ஆண்டுக்கு 362 நாள்கள் சந்தனக் காப்பிலேயே இருக்கும் மூலவருக்கு, சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளுக்கு முந்தைய இரு நாள்கள் சந்தனம் களையப்பட்டு பக்தா்களுக்கு நிஜரூப தரிசனத்தில் காட்சியளிப்பது வழக்கம்.
அதன்படி வரும் மே 9 (சனி) மற்றும் 10ஆம் தேதி (ஞாயிறு) என இரண்டு நாள்களும் பக்தா்களுக்கு நிஜரூப தரிசனத்தில் அருள்பாலிக்கிறாா் மாசிலாமணீஸ்வரர்.
சென்னை ஆவடி - அம்பத்தூா் இடையே திருமுல்லைவாயிலில் அமைந்துள்ள தொன்மையான சிவத்தலம் ஸ்ரீகொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வரா் திருக்கோயில். சுமாா் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெருமை வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் மூலவா் மாசிலாமணீஸ்வரா் சுயம்பு மூா்த்தியாக அருள்பாலிக்கிறாா்.
தீண்டாத்திருமேனியான இவரை தேவார நால்வா்களில் ஒருவரான சுந்தரமூா்த்தி நாயனாா், வள்ளலாா், அருணகிரி நாதா் உள்ளிட்ட பல்வேறு அருளாளா்கள், மகான்கள் பாடிப்பரவி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (மே 9, 10) சந்தனக் காப்பு களையப்பட்டு, நிஜரூப தரிசனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பார். இதையடுத்து மே 11ஆம் தேதி திங்கள்கிழமை சதய நட்சத்திர நாளில் மீண்டும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது.