(சத்தியமங்கலத்தில் திறக்கப்பட்ட ஆட்டோ உதிரி பாகம் விற்கும் கடையில்...)
எதுவும் உதிரி இல்லை;
ஒவ்வொன்றும் முக்கியமானதே.
-சத்தி ஏ.ஜே. ஜப்பார், ஈரோடு மாவட்டம். பரிசு ரூ. 100/-
கடவுளே, எனக்கு நிறைய பணம் உள்ள பையைக் கொடு. பெரிய வாகனத்தைக் கொடு. நிறைய பெண்களைக் கொடு. நல்ல வேலை கொடு.
கடவுள்: பக்தா உன் பிரார்த்தனை பலித்தது. பஸ் கண்டக்டர் ஆகக் கடவாய்.
- வே. மாக்ஸிம், சென்னை-50.
""நான் உங்க கடைக்குப் புதுசா வர்றேன். கொஞ்சம் நல்லா வெட்டி விடுங்க''
""இப்ப கட்டிங் பண்ணிக்கிட்டுப் போனவரு ஒரு வக்கீல். வெளியே பைக்ல வந்து, கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்னு சொன்னவரு ஒரு டாக்டர். என் கஸ்டமர் எல்லாரும் பெரிய ஆளுங்க.''
""பெரிய ஆளா இருந்து என்ன பிரயோஜனம்? தலையில முடியிருக்கறவங்களா இருக்கணும் இல்ல?'
-இரா.சம்பத்குமார், நாமக்கல். பரிசு ரூ. 100/-
மத்தவங்க தப்பைக் கண்டுபிடிக்கிறது சுலபம். நம்ம தவறை உணர்றது கஷ்டம்!
-வே.ராம்குமார், வேலூர்- 632001.
கண்டதைச் சொல்லுகிறேன்- உங்கள்
கதையைச் சொல்லுகிறேன்- இதைக்
காணவும் கண்டு நாணவும் உமக்குக்
காரணம் உண்டென்றால்- அவ
மானம் எனக்குண்டோ?
நல்லதைச் சொல்லுகிறேன்- இங்கு
நடந்ததைச் சொல்லுகிறேன்- இதற்கெனைக்
கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும்
கொள்கை உமக்கென்றால்- உம்முடன்
கூடியிருப்ப துண்டோ?
வாழ்ந்திடச் சொல்லுகிறேன்- நீங்கள்
வாழ்ந்ததைச் சொல்லுகிறேன்- இங்கு
தாழ்வதும் தாழ்ந்து வீழ்வதும் உமக்குத்
தலையெழுத்தென்றால்- உம்மைத்
தாங்கிட நாதியுண்டோ?
கும்பிடச் சொல்லுகிறேன்- உங்களைக்
கும்பிட்டுச் சொல்லுகிறேன்- எனை
நம்பவும் நம்பி அன்பினில் தோயவும்
நம்பிக்கை இல்லையென்றால்- எனக்கொரு
தம்பிடி நஷ்ட முண்டோ?
-ஜெயகாந்தன் கவிதைகள் நூலில்...
மைக்கேலின் தாய் லீனா வயிற்று வலியால் துடித்தாள். உடனடியாக மைக்கேல் அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்தான். ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அவசரப்படுத்தினார் டாக்டர். மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தியேட்டரில் படுக்க வைத்தனர். டாக்டர் வந்து ஆபரேஷனுக்குத் தயாரான நேரத்தில் ""நான் எங்கே இருக்கிறேன்'' என்று கண்விழித்தாள். போதிய அளவு மயக்க மருந்து செலுத்தாததை அறிந்து சரியான அளவு மயக்க மருந்து கொடுக்குமாறு சொன்னார் டாக்டர். கொடுக்கப்பட்டது.
சற்று நேரத்துக்கெல்லாம் மயக்கம் தெளிந்து எழுந்த லீனா ""நான் எங்கே இருக்கிறேன்?'' என்றார்.
""அம்மா நீங்கள் தியேட்டரில் இருக்கிறீர்கள். கவலைப்பட வேண்டாம்'' என்றார் டாக்டர்.
லீனா நிதானமாக சொன்னார்: ""அப்ப படத்தை உடனே போட வேண்டியதுதானே?''
-பரசுராம், ராமநாதபுரம்.
சமூக ஆர்வலர் ஒருவர் மதுவின் கொடுமை குறித்து கிராம மக்களிடையே விளக்கிக் கொண்டிருந்தார். ஒரு டம்ளரில் சாராயத்தை ஊற்றி ஒரு புழுவை அதில் போட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் புழு துடிதுடித்து இறந்தது.
மக்களை நோக்கிக் கேட்டார்.
""இதிலிருந்து என்ன தெரிந்து கொள்கிறீர்கள்?''
""சாராயம் குடித்தால் வயிற்றில் இருக்கும் புழு அழியும் என்று தெரிகிறது'' என்றார் ஒரு விவசாயி.
-நெ.ராமன், சென்னை-74.