சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வயது 90! இந்தத் தொண்ணூறில் 62 ஆண்டுகள் அங்கே அதுதான் ஆளுங்கட்சி! இவ்வளவு இருந்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பயம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
சோவியத் நாட்டில் கம்யூனிஸம் தோற்று சின்னா பின்னமாகி விட்டது போல சீனாவிலும் ஆகிவிடக்கூடாதே என்ற கவலை. ஆகிவிடுமோ என்ற பயம்.
"ஒரு காலத்தில் சீனா கம்யூனிஸ்ட் நாடாக இருந்தது' என்று சொல்லும்படியான நிலை ஏற்படக்கூடாது என்று மகா எச்சரிகையாக இருக்கிறது சீன அரசு.
1991- இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, 74 ஆண்டுகள் பதவியில் இருந்தபிறகு நொறுங்கிப்போனது. அது சீனாவுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக அமைந்தது. சீனாவில் பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையே உள்ள இடைவெளி எவ்வளவு விரைவில் குறைக்கப்படுகிறதோ அவ்வளவு நல்லது அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு.
அடுத்த ஆண்டு சீனத் தலைமையில் பெரும் மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. அதிபர் ஹூ ஜின்ட்டாவ் அவர்களும், பிரதமர் வென் ஜியாபாவ் அவர்களும் மற்றும் ஏராளமான தலைவர்களும் "இரண்டு முறை பதவி வகித்தாயிற்று. போதும். இளைய தலைவர்களுக்கு வழி விடுவோம்' என்று "பதவி ஓய்வு' பெறப் போகிறார்கள். துணை அதிபர் ஜி ஜின்பிங் அதிபராகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
மா-úஸ-துங்கிற்குப் பிறகு பதவிக்கு வந்த டெங் ஸியோ பிங் தொடங்கிய பொருளாதாரச் சீர்த்திருத்தங்களைத் தொடர வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து மக்கள் எதிர்பார்த்தாலும், அது அமைதியின்மையை ஏற்படுத்தலாம், அதிருப்தியை அதிகப்படுத்தலாம் என்ற ஒரு வகை பயமும் நிலவிக் கொண்டிருக்கிறது.
உள்ளூர் கலவரம் ஏதேனும் உருவாகக் கூடுமோ என்ற கலவரத்தில் 90 பிலியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. எதற்காக?
காவல் துறையைப் பலப்படுத்த வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப் படுத்தவேண்டும் அதற்காக!
எந்தப் போர் முடிந்தாலும் அதன் மோசமான விளைவுகள் ரொம்ப காலத்திற்கு மக்களைப் பாதித்துக் கொண்டுதான் இருக்கும். வியட்நாம் போர் மட்டும் என்ன விதிவிலக்கு என்றாகி விடுமா?
அதன் விளைவுகள் கொஞ்சம் வேறு மாதிரி.
வியட்நாம் போரின்போது தெற்கு வியட்நாமில் காடுகளில் பதுங்கிக் கொண்டிருந்த கொரில்லாப் போர் வீரர்களை முற்றிலும் அழிப்பதற்கு முதல்படி அவர்களைப் பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டிருந்த அந்தக் காட்டுப் புதர்களை, செடிகொடிகளை அழித்துவிட வேண்டும் என்று நினைத்த அமெரிக்கா தன் விமானங்களில் "ஏஜெண்ட் ஆரஞ்ச்' என்ற வேதியியல் மருந்தைக் கொண்டு சென்று பரவலாகத் தூவியது. இந்த ஏஜெண்ட் ஆரஞ்ச் ஒரு விஷத்தன்மையுடன் கூடிய செடி கொல்லி மருந்து எனலாம்.
தூவியாயிற்று. மரம் செடி கொடிகள் செத்தாயிற்று. போரில் பல்லாயிரம் உயிர்கள் போயாயிற்று. போரும் முடிந்தாயிற்று.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பே போர் முடிந்து விட்டாலும், அந்த விஷ களைக்கொல்லி மருந்தின் நச்சுத்தன்மையால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். பலருக்குப் புற்று நோய் வந்தது. பிறவி ஊனங்கள் ஏற்பட்டன.
இப்போது வியட்நாம் மண்ணில் ஏஜெண்ட் ஆரஞ்ச் திப்பிகளைச் சுத்தம் செய்வதில் வியட்நாமும், அமெரிக்காவும் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அன்றைய எதிரிகள் இன்றைய நண்பர்கள்.
நண்பர்கள் என்றால் கட்டிப் பிடித்துக் கொஞ்சிக் குலவிக் கொண்டிருக்கிறார்கள் என்றல்ல அர்த்தம். போர் எப்போதோ முடிந்து விட்டது. நாம் தூவிய ரசாயன மருந்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ என்று அமெரிக்காவுக்கு மனச்சாட்சி குத்துகிறது.
"நானும் உன்னோடு சேர்ந்து மண்ணைச் சுத்தம் செய்கிறேன்' என்று ஒரு பிராயச்சித்தப் பணியில் தன்னை வியட்நாமில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
உலகில் போதைப் பொருள் கடத்தலின் தலைநகரம் எதுவெனக் கேட்டால் அந்த நான்கெழுத்துதான் பதில்: மெக்ஸிகோ! போதைப் பொருள் அங்கே ஒரு வளமான பிசினஸ். மிலியன்களைக் கொட்டித்தரும் வர்த்தகம். அப்படியானால் அரசே அந்த பிசினûஸ ஊக்குவிக்கிறதோ என்று நினைத்துவிடக்கூடாது. எல்லா நாடுகளில் இருக்கும் சட்டங்களைப் போலவே அங்கேயும் அது தண்டனைக்குரிய குற்றம்தான். ஆனால் போதைப்பொருள் தாதாக்கள் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. போலீஸின் கண்முன்னே ஜாம்ஜாமென்று போதைப் பொருள் கடத்தல். போலீஸ் வளைத்துப் பிடிக்கிறது. "நீ சுடுகிறாயா.. சுடு. நானும் சுடுகிறேன். நான் செத்தாலும் சரி.. நீ செத்தாலும் சரி...' இதுதான் மெக்ஸிகோவின் இன்றைய நிலவரம். இதில் வேதனைக்குரிய ஒரே அம்சம் என்னவென்றால் மெக்ஸிகோ போதைப் பொருள் கும்பல்கள் இப்போது இளம் டீன் ஏஜ் பெண்களை வேலைக்குச் சேர்த்து அவர்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்து "ஹிட்வுமன்' பதவி யில் அமர்த்துவதுதான்.
"ஹிட்வுமன்' என்றால்?
போதைப் பொருள் கடத்தல் கும்பலை எதிர்த்து யாரேனும் வம்புக்கு வந்தால் அவர்களைச் சுட்டு குளோஸ் செய்யும் பெண்.
இரண்டு வாரம் வேலை செய்தால் ஆயிரம் டாலர் சம்பளம் தருகிறார்கள். இது நாட்டின் சராசரி சம்பளத்தைவிட மூன்று மடங்கு அதிகம்!
இதில் இந்தப் பெண்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. தவறான வழியில், என்பது ஒன்று. இன்னொரு உண்மை அவர்களின் முதலாளிகள் மிகக் கொடுமையான இயல்பு கொண்டவர்கள் என்பதால் பாலியல் கட்டாயங்களுக்கும் உட்பட்டு ஆக வேண்டிய நிலை.
பொதுவாகவே மெக்ஸிகோவை "டிரக்ஸிகோ' அல்லது "செக்ஸிகோ' என்பார்கள்.
இப்போது இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது.
உலகிலேயே மிக உயர்ந்த பதவிகள் என்று ஒரு பத்து பதவிகளைப் பட்டியிலிட்டால் ஐ.நா. பொதுச்செயலாளர் பதவியும் அவற்றில் ஒன்றாக இருக்கும்.
அந்தப் பதவியில் இதுவரை இருந்த பான்-கீ-மூன் என்ற தென்கொரிய நாட்டுக்காரரிடம் "இந்தா பிடி இன்னோர் ஐந்து வருஷம்' என்று மீண்டும் அவரையே தேர்ந்தெடுத்திருக்கிறது ஐ.நா.சபை.
இது மிகப் பெரிய, அரிய கெüரவம்.
பான்-கீ-மூன் அவர்களுக்கு உலகில் எங்கெல்லாம் சண்டை நடக்கிறதோ அங்கெல்லாம் போய் சமாதானம் செய்தவர் என்கிற பெரிய பெருமையெல்லாம் கிடையாது. அதே போல கவர்ச்சி மிக்க தலைவர் என்றும் அவரைச் சொல்ல முடியாது. அதிகாரம் மிக்க நாடுகளில் மனித உரிமை மீறல்கள் நடக்கும்போது அதை விமர்சிக்காமல் வாய் மூடி மெüனியாக இருக்கிறார் என்றும் அவர் கருதப்படுகிறார்.
ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அணு ஆயுதக் குறைப்பு முயற்சிகள், பெண்கள் உரிமை ஆகியவற்றில் மூன் ஆற்றிய, ஆற்றி வரும் பணிகள் பாராட்டு பெற்றிருக்கின்றன.
அமைதியானவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்.
"எனக்களிக்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் என்னை நெகிழ வைக்கிறது. வார்த்தைகளில் அதை வெளிப்படுத்த இயலவில்லை. மாறிவரும் உலகச் சூழலில் ஐ.நா.வை ஒரு பாலமாக நான் தொடர்ந்து செயல்படுத்துவேன்' என்று கண்களில் நன்றிக் கண்ணீரோடு சொன்னார் மூன்.
தன் இரண்டாவது பதவிக்காலத்திலும் மூன் அவர்களுக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன.
என்ன செய்யப் போகிறார் மூன்?
பொறுத்திருந்து பார்ப்போம்.