முகங்கள்: ஓவியம்தான் எனது முதல் காதல்...!

பெற்றோரிடமும், பொதுமக்களிடமும் தாய்மொழியான தமிழ்மொழியில் பேசத் தயக்கம் காட்டும் இந்தக் காலத்தில் சொந்த முயற்சியால் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் நாளிதழ்கள், புத்தகங்ளைப் படித்து திரைத் துறை தொடர்பான "தி
முகங்கள்: ஓவியம்தான் எனது முதல் காதல்...!
Published on
Updated on
3 min read

பெ ற்றோரிடமும், பொதுமக்களிடமும் தாய்மொழியான தமிழ்மொழியில் பேசத் தயக்கம் காட்டும் இந்தக் காலத்தில் சொந்த முயற்சியால் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் நாளிதழ்கள், புத்தகங்ளைப் படித்து திரைத் துறை தொடர்பான "திரைச் சீலை' என்ற புத்தகத்தை எழுதி தேசிய விருதும் பெற்றிருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஓவியர் ஜீவா என்கிற வே.ஜீவானந்தம். பல்வேறு பணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து...

 உங்களுக்கு ஓவியக் கலை மீது ஆர்வம் ஏற்பட காரணம்?

 நான் பிறந்து வளர்ந்தது கோவையில்தான். எனது தந்தை வேலாயுதம், சினிமா பேனர்கள் எழுதுவதை தொழிலாக செய்து வந்தார். அவர் பேனர்கள் எழுதும் போது அவருடன் இருந்து அவர் வரையும் படங்களை உற்று கவனிப்பேன். மேலும் அவருக்கு அருகே நின்றுக்கொண்டு பெயிண்டிங் பிரஷ், பெயிண்ட் போன்றவற்றை எடுத்துத் தரும்போது நானும் வரையத் தொடங்கினேன்.

 மேலும் பள்ளியில் படிக்கும் போது பல்வேறு போட்டிகளில் பங்கேற்றேன். முக்கியமாக ஓவியப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசுகளும் பெற்றேன். பள்ளியில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் பள்ளி கரும்பலகையில் வரைதல், பேனர் எழுதுதல் போன்றவற்றை சிறப்பாகச் செய்வேன். சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் போதும் ஓவியம் மீது தனிக் காதல் உண்டு. இது போன்ற நிகழ்வுகள்தான் என்னை ஓவியனாக மாற்றியன.

 ஓவியரான உங்களுக்கு சினிமா தொடர்பான புத்தகம் எழுத ஆர்வம் எப்படி வந்தது?

 ஓவியம் எப்படி எனது முதல் காதலோ, அப்படித்தான் சினிமாவும். கோவையில் வெளியாகும் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி போன்ற அனைத்துப் படங்களின் பேனர்களையும் எழுத, எனது தந்தைக்கு வாய்ப்பு கிடைத்ததால் அவர் அடிக்கடி படங்களை பார்க்கத் தியேட்டருக்குச் செல்வார். அவருடன் நானும் செல்வேன். தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி பிற மொழிப்படங்களையும் பார்க்க என் தந்தையின் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. எப்படிப்பட்ட படங்களைப் பார்க்க வேண்டும், எப்படி விமர்சிப்பது என்பது குறித்து என் தந்தை கற்றுக் கொடுத்தார்.

மேலும் கல்லூரியில் படிக்கும் போது எனது நண்பர்கள் சிலர் சேர்ந்து சினிமா கிளப் அமைத்தோம். இதன் மூலம் சினிமா ஆர்வலர்கள் பலருடன் நட்பு ஏற்பட்டதால் சினிமா பற்றிக் கற்றுக்கொள்ள முடிந்தது.

 சினிமா பற்றி எழுதத் தொடங்கியதற்கு எனது நண்பர் மரபின் மைந்தன் முத்தையா ஒரு முக்கியக் காரணம். அவர்தான் என்னை ஊக்கப்படுத்தி "ரசனை' என்ற இதழில் சினிமா பற்றிய விமர்சனங்கள், கட்டுரைகளை எழுத சொன்னார். மேலும் நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர். சினிமா பற்றி எழுதிய கட்டுரைகளைதான் "திரைச் சீலை' என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.

 "திரைச் சீலை' புத்தகத்திற்கு தேசிய விருது கிடைத்தது பற்றி உங்கள் கருத்து?

 எனது புத்தகத்திற்கு தேசிய விருது கிடைத்ததை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

 1982-ல் அறந்தை நாராயணன் எழுதிய "தமிழ் சினிமாவின் கதை' என்ற புத்தகத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து, தமிழ்மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களில் 29 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தாண்டில் தான் இவ்விருது கிடைத்துள்ளதாக செய்தித்தாள்களில் படித்தேன். இப்புத்தகம் முப்பத்து ஒன்பது கட்டுரைகளைக் கொண்டது. இதில் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக் குறித்தும், உலக சினிமாவின் சிறப்புகள் குறித்தும் எழுதியிருக்கிறேன். மேலும் பல்வேறு திரைப்படங்களை பற்றி ஒப்பீடு செய்துள்ளேன். சினிமா பற்றி இன்னும் நிறைய புத்தகங்கள் வர வேண்டும் என்பதே எனது ஆர்வம்.

 இன்றைய தமிழ் சினிமாவின் நிலை என்ன?

 சினிமா என்பது வெறும் பொழுது போக்கு ஊடகம் மட்டுமல்ல. நாம் சொல்லும் கருத்துகளையும், கற்பனைகளையும் எளிதில், விரைவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது சினிமா மட்டும்தான். ஆனால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி திருப்திகரமாக இல்லை. தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்குத் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. கதைக்கு முக்கியத்துவம் இல்லை. புதிய முயற்சிகள் இறந்து விட்டன. இந்நிலை மாற வேண்டும்.

 ஓவியக் கலையை வளர்க்க நீங்கள் மேற்கொள்ளும் பணி?

 கோவை மாநகரில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறேன். இக்கண்காட்சிகளை நடத்த மிகவும் உறுதுணையாக இருப்பது கஸ்தூரி சீனிவாச அறக்கட்டளைதான். ஓவியக் கண்காட்சிகளை நடத்த ஆண்டு தோறும் இந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் இலவசமாக இடவசதி தந்து உதவி வருகின்றனர்.

 மேலும் 2008-2009 வரை கோவை சிறையில் இருக்கும் கைதிகளுக்கு ஓவியம் வரைதல் குறித்துப் பயிற்சி அளித்துள்ளேன். கோவை "சித்திரகலா அகாடமி'யின் தலைவராகவும் இருந்து வருகிறேன். வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிக் குழந்தைகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் ஓவிய வகுப்புகளை நடத்தி வருகிறேன்.

 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குறளோவியங்களை வரைந்த அனுபவம் எப்படி இருந்தது?

 இந்த வாய்ப்பு என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களில், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஓர் ஓவியர் எனத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 133 ஓவியர்களில் 130 பேர் ஓவியத்தில் பட்டம் பெற்றவர்கள். மற்றவர்கள் வேறு துறையைச் சார்ந்தவர்கள். இதில் நானும் ஒருவன். ஓவிய மேதை ஆதிமூலம் தான் "அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' என்ற முதல் குறளுக்கு வரைந்தார். இவரைப் போன்ற மேதைகளின் ஓவியங்கள் இடையே எனது ஓவியமும் இருப்பதை நான் வாழ்வில் செய்த பாக்கியமாகக் கருதுகிறேன்.

 இன்றைய இளைய தலைமுறைக்கு ஓவியக் கலை மீது ஆர்வம் உள்ளதா?

 இன்றைய இளைய தலைமுறையினர் பல்வேறு கலைகளைக் கற்க ஆர்வமாக உள்ளனர். ஆனால் பெற்றோர் இதற்கு எதிராக உள்ளனர். ஒரு குழந்தை பென்சில் எடுத்து வரைய ஆரம்பித்தால், அப்பென்சிலைப் பறித்து வைத்துவிட்டு, கணிதம் அல்லது அறிவியல் புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொல்லும் பெற்றோரும் இருக்கின்றனர். தங்களது குழந்தைகள் மருத்துவர் அல்லது என்ஜினீயராக தான் வர வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர, தங்களது குழந்தைகள் ஓவியராக அல்லது பிற கலைகளில் சிறந்தவர்களாக வர வேண்டும் என்று எண்ணும் பெற்றோர் இன்றைய காலத்தில் மிகவும் குறைவு. இது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. கலைகளைக் கற்றவர் வாழ்வில் வீழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. எனவே குழந்தைகளுக்குக் கலைகள் மீது ஆர்வத்தை வளர்க்க பெற்றோர் முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.