நெஞ்சம் மறப்பதில்லை: பாரம்பரியம் காக்கும் ஜமீன்

உயர்ந்து நிற்கும் மதில்கள், உள்ளுக்குள் அரசு அலுவலகங்கள், காரை பெயர்ந்த நிலையிலும், காலம் கடந்தும், சரித்திரத்தை தனக்குள் தக்கவைத்துக்கொண்ட பாரம்பரிய கட்டடங்கள். நவீனம் புகுந்த நிலையிலும், தன்னுள் பழை

உயர்ந்து நிற்கும் மதில்கள், உள்ளுக்குள் அரசு அலுவலகங்கள், காரை பெயர்ந்த நிலையிலும், காலம் கடந்தும், சரித்திரத்தை தனக்குள் தக்கவைத்துக்கொண்ட பாரம்பரிய கட்டடங்கள். நவீனம் புகுந்த நிலையிலும், தன்னுள் பழைமையை பறைசாற்றத் துடிக்கும் பெரிய அறைகள் என கம்பீரம் குறையாமல் காட்சியளிக்கிறது ராமநாதபுரம் ஜமீன் அரண்மனை.

தென் தமிழகத்தில் பிரிக்கப்படாத பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதியை ஆண்டவர்கள் சேதுபதிகள். வங்கக்கரையின் அதிபதியாய் முதலில் போகளூரையும், பின் ராமநாதபுரத்தையும் தலைநகராக்கி ஆட்சிபுரிந்தவர்கள். சேதுக் கரைக்கு

அதிபதிகளாகத் திகழ்ந்ததால் சேதுபதிகள் என அழைக்கப்பட்டனர்.

கி.பி.12 ஆம் நூற்றாண்டிலே திருமயம் பகுதியில் விஜயரகுநாத முத்துவயிரிய முத்துராமலிங்க சேதுபதி இருந்துள்ளார். ராமேசுவரம் திருக்கோயில் சுற்றுச்சுவரை கி.பி.15 ஆம் நூற்றாண்டிலேயே உடையான் சேதுபதி கட்டினார் என்ற செய்திகள் உள்ளன. எனினும் கி.பி.1621 முதல் 1623 வரையில் ராமநாதபுரம், ராமேசுவரம் கடற்கரைப் பகுதியைக் காக்கவும், கோயிலுக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் மதுரை நாயக்க மன்னர்களால் நியமிக்கப்பட்ட உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடையக்கத் தேவருக்குப் பிறகே சேதுபதி

வரலாறு தெளிவாகக் கிடைக்கிறது.

பாண்டியர், சோழர்களுக்குப் பிறகு ராமேசுவரம், கடற்கரைப் பகுதியைக் காத்து நின்ற பெருமை சேதுபதிகளுக்கே உண்டு. சேதுபதிகளது தலைநகராக ராமநாதபுரம் மாறுவதற்கு முன்பு சத்திரக்குடி அருகே உள்ள போகளூரே தலைநகராக விளங்கியுள்ளது.

கி.பி. 1678-க்குப் பிறகு சேதுபதிகளின் தலைநகராக ராமநாதபுரத்தை கிழவன் சேதுபதி மாற்றியுள்ளார்.

அவர்தான் இப்போதைய அரண்மனை கற்கோட்டையைக் கட்டியுள்ளார். வைகையாறு கலக்கும் முகத்துவாரமாக ராமநாதபுரம் கண்மாய் விளங்குகிறது. இதையடுத்து வைகை முகமாக இருந்த காரணத்தால் முகவை என்றே ஆரம்பகாலத்தில் ராமநாதபுரம் பகுதியை அழைத்ததாகக் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் கோட்டைக்குள் சேதுபதிகள் அமர்ந்து ஆட்சிபுரிந்த பீடமே தற்போது ராமலிங்க விலாசமாக விளங்கிவருகிறது. சேதுபதி மன்னர்கள் வரிசை வருமாறு:

உடையான் சேதுபதி என்ற சடைக்கன் (கி.பி. 1601 -1623), கூத்தன் சேதுபதி (1623-1635), தளவாய் ரகுநாத சேதுபதி (1635-1645), திருமலை ரெகுநாத சேதுபதி (1646-1676), ராஜசூரிய சேதுபதி (1676), அதான ரகுநாத சேதுபதி (1677), இரகுநாத கிழவன் சேதுபதி (1678-1710), முத்துவைரவநாதசேதுபதி (1710-1712), முத்து விஜயரகுநாத சேதுபதி (1713-1725), சுந்தரேச சேதுபதி (1725), பவானி சங்கர் சேதுபதி (1725-1727), குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி (1728-1735), சிவகுமார முத்து விஜயரகுநாத சேதுபதி (1735-1747), ராக்கத் தேவர் சேதுபதி (1748), செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி (1749-1762), முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி (1762-1772, 1781-1795).

சேதுபதி மன்னர்கள் ஆன்மிகப்பணியில் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். வளரி போன்ற ஆயுதங்களுடன், குதிரைப்படை, தரைப்படையை அமைத்துள்ளனர். பீரங்கி, துப்பாக்கி படைகளும் இருந்துள்ளன. வீரம் செறிந்த போர் வீரர்களைக் கொண்டதாக ராமநாதபுரம் சேதுபதிகள் படை விளங்கியுள்ளது. கோயில்கள் பல கட்டிய சேதுபதிகள், பிறமதத்தையும் மதித்து வந்துள்ளனர்.

முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதிக்குப் பிறகு ராமநாதபுரம் சமஸ்தானம் என்ற நிலையிலிருந்து ஜமீனாக ஆங்கிலேயரால் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், ஆங்கிலேயருக்குக் கப்பம் செலுத்துவதை சேதுபதிகள் விரும்பவில்லை என்றே வரலாறுகள் தெரிவிக்கின்றன.

ஜமீனாக அறிவிக்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் முதல் ஜமீனாக ராணி மங்களேஸ்வரி (கி.பி.1803-1812) இருந்துள்ளார். அவருக்குப் பிறகு அண்ணாசாமி சேதுபதி (1812-1815), விஜயரகுநாத ராமசாமி சேதுபதி (1816-1830), ராணி முத்துவீராயி நாச்சியார் (1830-1841), பர்வதவர்த்தனி நாச்சியார் (சிறிதுகாலம்), துரைராஜா என்ற முத்துராமலிங்க சேதுபதி (1841-1873), ராஜா பாஸ்கர சேதுபதி (1888-1903), ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி (1910-1928), சண்முகராஜேஸ்வர நாகநாத சேதுபதி (1928-1948) ஆகியோர் ஜமீன்களாக இருந்துள்ளனர்.

இவர்களில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பத்து வயதாக இருக்கும்போது ராமநாதபுரம் ஜமீனுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தாயாருடன்,  திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர்கள்  சென்னை ஜார்ஜ் கோட்டையில் அடைக்கப்பட்டனர். 26 ஆண்டு சிறையிலேயே கடைசிக்காலம் வரை இருந்தார்.

பாஸ்கர சேதுபதி காலத்தில்தான் வீரத்துறவி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த உலக சமயத்தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பினார். தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை அவ்வைப் பிராட்டிக்கு வழங்கிய அதியமானைப் போலவே, பாஸ்கர சேதுபதியும், தனக்கு கிடைத்த வாய்ப்பை விவேகானந்தருக்கு அளித்து அவரையே அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

விவேகானந்தர் ஆன்மிக மாநாட்டை முடித்து திரும்பியபோது, அவரது கால் பாதத்தை தனது தலையில் வைக்குமாறு சேதுபதி கேட்க, விவேகானந்தர் மறுத்துவிட்டார். பின்னர் நீண்ட வற்புறுத்தலுக்குப் பின் சேதுபதியின் கைகளில் விவேகானந்தர் கால்வைத்து இறங்கினாராம், விவேகானந்தர் அமர்ந்து வந்த  சாரட் வண்டியை சேதுபதி இழுத்து அவருக்கு மரியாதை செலுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

பாஸ்கர சேதுபதியின் சகோதரரான வள்ளல் பாண்டித்துரைத் தேவர்தான் மதுரை 4 ஆம் தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். ஆன்மிகம், தமிழ்ப்பணியில் சேதுபதிகள் தங்களை அர்ப்பணித்திருந்தனர் என்பதற்கு இதுபோன்ற பல ஆதாரங்கள் உள்ளன.

பாஸ்கர சேதுபதி தானத்திலும் சிறந்து விளங்கியுள்ளார். அவர் தனது அரண்மனையைக்கூட தானம் செய்யத் தயாராக இருந்துள்ளார். இதையறிந்த சிருங்கேரி சுவாமிகள் அரண்மனையைத் தானம் கேட்க சற்றும் தயங்காமல் அதைக் கொடுத்தாராம் சேதுபதி. உடனே சேதுபதியின் மகன் முத்துராமலிங்க சேதுபதிக்கே சிருங்கேரி சுவாமிகள் அரண்மனையை அளித்து பட்டம் சூட்டினாராம். திருவாவடுதுறை ஆதீன மடத்துக்கு பாஸ்கர சேதுபதி 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் வழங்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் அரண்மனையை விட்டு வெளியேறிய பாஸ்கர சேதுபதி கடைசிக் காலம் வரையில் பாபநாசத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனமடத்திலேயே தங்கியிருந்தார். அவர் இறந்த நிலையில், அவரது உடலைச் சுமந்துகொண்டுதான் மதுரை-ராமேசுவரம் இடையிலான முதல் ரயில் வந்துள்ளது.

பாஸ்கர சேதுபதியின் மகன் முத்துராமலிங்க சேதுபதி தந்தை இழந்த சொத்துகளை மீட்டுள்ளார். அவருக்குப் பிறகு சண்முகராஜேஸ்வர நாகநாத சேதுபதி பொறுப்பில் இருந்தார். அவர், ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.

இவர் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தபோதுதான் வைகை அணை கட்டப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சராகவும்  இருந்துள்ளார்.

பல முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அவர் 1967 தேர்தலில் தோற்றார். பின் சிறிது காலத்தில் இறந்ததார். அதற்குப்பிறகு, அவரது மகன் ராமநாத சேதுபதி பொறுப்பில் இருந்தார். அவர் ராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவராகச் செயல்பட்டார். அவருக்கு ஆண் வாரிசு இல்லை.

இதனால் அவரது மனைவி ராணி இந்திராதேவி நாச்சியார், பொறுப்புக்கு வந்தார். அவருக்குப் பிறகு அவரது மகள் பிரம்ம கிருஷ்ணராஜேஸ்வரி நாச்சியாரும், அவரது சகோதரரான குமரன் சேதுபதியும் இப்போது வாரிசாக உள்ளனர்.

ராமநாதபுரம் ராமவிலாசம் அரண்மனை தற்போது இருபிரிவாக உள்ளது. சேதுபதிகள் மணிமுடிசூடி, அரசவை நடத்திய இடம் தொல்பொருள் ஆய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு காட்சியகமாக உள்ளது. இங்குள்ள ஓவியங்கள் அரிய பொக்கிஷமாக உள்ளதை அறியலாம். அவை தற்போது சிதைந்துவருவதையும் காணமுடிகிறது.

மற்றொரு பகுதியில் குமரன் சேதுபதி குடும்பத்தினர் தங்கியுள்ளனர். அவரது உறவினர்கள் 25 பேருக்கும் மேலாக அரண்மனை பகுதியில் உள்ளனர். கல்வி அலுவலகம், ராஜா மெட்ரிக்குலேஷன் பள்ளி மற்றும் சேது பதிகளுக்குச் சொந்தமான ஏராளமான கோயில் தேவஸ்தான அலுவலகம் என பல அலுவலகங்கள் உள்ளன.

பழைய வரலாற்றை விளக்கும் கருவூலமாகவே ராமலிங்கவிலாசம் திகழ்கிறது. தமிழகத்தின் ஜமீன் என சொல்லிக்கொள்ளும் வகையில் அனைத்து அம்சங்களுடனும் ராமநாதபுரம் அரண்மனை திகழ்ந்தது அதன் தனிச்சிறப்பு.

அரண்மனையில் ராஜா என குமரன் சேதுபதியையும், ராணி என அவரது துணைவியார் ராணிலெட்சுமி நாச்சியாரையும் மக்கள் இன்றும் அழைக்கின்றனர். இவர்களுக்கு நாகேந்திர சேதுபதி என்ற மகனும், மகாலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். மகன் மதுரையில் 10 ஆம் வகுப்பும், மகள் 8 ஆம் வகுப்பும் படிக்கின்றனர்.

தற்போதைய வாழ்வு குறித்து ராஜா என். குமரன் சேதுபதியிடம் கேட்டபோது அவர் கூறியது:

ஆன்மிகத்துக்கும், தமிழுக்கும் சேவை புரிவதையே தங்களது பிறவிப்பயனாகக் கருதி வாழ்ந்தவர்கள் சேதுபதிகள். அந்த வழியில் இப்போதும் செயல்பட்டு வருகிறேன். மதுரை தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க் கல்லூரி மூலம் தற்போது தமிழ்ப் பணி தொடர்கிறது.

ராமநாதபுரத்தில் நடைபெறும் விஜயதசமி விழாவான தசராவின்போது அனைத்து கோயில்களில் இருந்தும் ஜமீன் குலதெய்வமான அருள்மிகு ராஜேஸ்வரி அம்மனை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது யானை மீது அருள்மிகு ராஜேஸ்வரி எழுந்தருளிச் செல்ல ராஜமரியாதையுடன் ஊர்வலம் நடப்பது இப்போதும் நடந்துவருகிறது.

ராமேசுவரம் திருக்கோயில் அறங்காவலர்குழுத் தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் உள்ளேன்.

ரோட்டரி சங்கத் தலைவராக இருந்தபோது, இலவசமாக இந்திராதேவி ரோட்டரி மகாலை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளேன். மன்னர் சேதுபதி கலைக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் படித்த பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல சமூக தேவைக்கான இடத்தை சேதுபதிகள் வழங்கியுள்ளனர்.

ராஜா மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு கடந்தது. இதில் தலைமை ஆசிரியராக இருந்த ராஜா அய்யர் கணிதம், ஆங்கிலத்தில் புகழ்பெற்று குடியரசுத் தலைவர் விருதையும் பெற்றவர் என்றார்.

""பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல காலவகையினானே'' என்ற தொல்காப்பியத்தின் இலக்கணத்துக்கு ஏற்ப புதிய மாற்றங்கள் பல வந்தபோதிலும், தனது பழைமையின் சுவடை இன்னும் பத்திரமாகவே பாதுகாத்து வருகிறது ராமநாதபுரம் அரண்மனை. ஆம்! ஆன்மிகம், தமிழ்ப் பணி என சமூக சேவையை முக்கியப் பணியாகக் கொண்டதால் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டாலும், மக்களால் மதிப்புக்குரியவர்களாகவே  பார்க்கப்படுகிறார்கள் ராமநாதபுரம் ஜமீன் பரம்பரையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com