Enable Javscript for better performance
புதுமை: எழுத்து வடிவில் கட்டடங்கள்!- Dinamani

சுடச்சுட

  

  புதுமை: எழுத்து வடிவில் கட்டடங்கள்!

  By த. முருகானந்தம்  |   Published on : 20th September 2012 01:49 AM  |   அ+அ அ-   |    |  

  kad1

  காகிதம் கண்டறியப்படாத காலத்தில் பனை ஓலை, கல்பாறைகள், சுட்ட மண்பாண்டங்கள், ஆமையின் ஓடு, செப்பேடுகள் என்று பலவற்றில் பழந்தமிழர்கள் எழுத்துகளைப் பொறித்தார்கள். அவைதான் கடந்தகால சரித்திரங்களை அறிந்துகொள்ள உதவும் ஆவணங்களாக இன்றைக்கு உதவிவருகின்றன. தற்போதுகரும்பலகை, காகிதம், கணினி என்று விஞ்ஞான வளர்ச்சியில் எழுது பொருள்களும் பலவிதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது அனைவரும் அறிந்ததே.

  இந்த நிலையில், எழுத்து வடிவில் கட்டடங்கள் கட்டும் நவீனயுக்தியை 25 ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொடங்கியவர்களின் சிந்தனையோட்டம், நம்மை இப்போது வியப்படையச் செய்கிறது. ஏனெனில், விமானத்தில் செல்பவர்களுக்குத்தானே அந்த எழுத்துகள் தெரியும், இந்த வழியாக விமானமே செல்வதில்லையே, இந்த அரிய முயற்சியை யார் காணப் போகிறார்கள் என்றெல்லாம் எதிர்மறை கேள்வி எழுப்பியவர்கள் இன்று வாயடைத்து நிற்கின்றனர். காரணம், செயற்கோள் நிலப்படங்கள் அடங்கிய இணைய தளங்களில் இன்றைக்கு உலகமே அந்த எழுத்துகளை விரைவில் பார்க்கப் போகிறது.

  தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கட்டட வடிவில் கட்டப்பட உள்ள எழுத்தின் வாசகம், "தமிழ்நாடு' என்பதாகும்.

  தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1981-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கினார். 975 ஏக்கரில் அமைந்த பல்கலைக்கழக வளாகம் அப்போதே தமிழக வரைபடம் வடிவில் அமைந்திருந்தது. மாவட்டங்களை பிரிக்கும் எல்லைக் கோடுகள் போன்று வளாகத்திற்குள் வளைவும், நெளிவுமாக சாலைகள் அமைக்கப்பட்டன.

  முதல் துணைவேந்தராக பணியாற்றிய வ.அய். சுப்பிரமணியம்தான் "தமிழ்நாடு' என்ற கட்டட எழுத்துகள் அடங்கிய பெருந்திட்ட வரைபடம் தயாரித்து, எம்.ஜி.ஆரிடம் பரிந்துரை செய்துள்ளார். எதிர்மறை விமர்சனங்களை புறந்தள்ளி, இந்த அரிய சாதனைக்கு அடிகோலினார் எம்.ஜி.ஆர். தமிழ்ப் பல்கலைக்கழக பெருந்திட்ட வரைபடத்தில் நாடாளுமன்ற கட்டடம் அமைப்பில் உள்ள நூலகக் கட்டடத்தை மையமாகக் கொண்டு 278 மீட்டர் ஆரத்தில் த-மி-ழ்-நா-டு என்ற வடிவங்களில் ஐந்து புலங்களுக்கும் கட்டடங்கள் கட்ட எம்.ஜி.ஆர். அனுமதித்தார்.

  முதல்கட்டமாக, ரூ. 40 லட்சம் மதிப்பில் "ழ்' என்ற எழுத்தின் வடிவில் தற்போதுள்ள மொழிப்புல அரங்கம் கட்டப்பட்டது. 1986-ம் ஆண்டு அறமுனிவர் மகாவீரர் பிறந்த நாளில் இக் கட்டடம் திறக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துவிட்டன. "தமிழ்நாடு' என்ற வடிவில் வான்நோக்கி கட்டடங்கள் எழுப்பும் முதல் முயற்சியாக "ழ்' வடிவ கட்டடம் கட்டி முடிக்கப்பட்டே வெள்ளிவிழா ஆண்டு கடந்துவிட்டது. இன்றைக்கு வரையில் பிற எழுத்துகளில் கட்டடங்கள் எழுப்பப்படாதது சற்று

  அதிருப்திதான்.

  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்

  ம. ராசேந்திரன் கூறியது: ""தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் நூலகக் கட்டடத்தை மையமாகக் கொண்டு, 250 மீட்டர் ஆரத்தில் தமிழ்நாடு என்ற எழுத்து வடிவங்களில் கட்டடங்கள் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. "ழ்' வடிவிலான தற்போதைய மொழிப்புலக் கட்டடம் ஏற்கெனவே கட்டப்பட்டுவிட்டது.

  பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையத்தால் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் கட்டடங்கள் கட்ட ரூ. 2.25 கோடி ஒதுக்கப் பெற்றுள்ளது. இந்த நிதியில் கல்வி நிலையக் கட்டடம் "மி' வடிவில் கட்டப்படவுள்ளது. தொலைநிலைக் கல்வி இயக்கக நிதியைப் பயன்படுத்தி, இந்த இயக்ககத்துக்கு ரூ. 1.50 கோடியில் கட்டடம் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையையும், தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம், கட்டடங்களுக்காக பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 1.30 கோடியையும் பயன்படுத்தி "த' வடிவில் கட்டடம் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலைஞர் உலகச் செம்மொழிகள் உயராய்வு மையம் தொடங்க பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு ரூ. 1.95 கோடி வழங்கியுள்ளது. இந்த மையத்துக்கான கட்டடம் கட்டுவதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2 கோடி

  வழங்கினார்.

  இந்த நிதியில் "டு' வடிவிலான கட்டடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வகையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கிய காலத்தில் திட்டமிட்டவாறு த-மி-ழ்-நா-டு ஆகிய எழுத்துகளின் வடிவிலான கட்டடங்களில், கடந்த 30 ஆண்டுகளில் "ழ்' வடிவிலான கட்டடம் மட்டுமே இருந்து வரும் நிலையில், தற்போது த-மி-டு ஆகிய 3 எழுத்துகள் வடிவிலான கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்றார் ராசேந்திரன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai