இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த தலைவர் தெரிந்த தலைவர் பார்த்த தலைவர் இவர் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்ததில்லை. வராது, அதே காரணத்தினால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தில்கூடத் தலைவரை ஏற்படுத்தவில்லை. அவசியம் என்றும் கருதவில்லை. இதயபூர்வமான தலைவர் இதயத்திலே குடியேறிய தலைவர். நமக்கெல்லாம் அப்போது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை நாற்காலியைக் காலியாகவே வைத்திருக்கிறோம். அந்தப் பீடத்திலே, நாற்காலியிலே வேறு ஆட்களை அமர்த்தவோ, நாங்களோ அல்லது நானோ விரும்பவில்லை.
நான் மிகத் தெளிவாகவே கூறிவிடுகிறேன், திராவிட முன்னேற்றக் கழகம் எந்த விதத்திலும் திராவிடர் கழகத்திற்கு எதிரானதல்ல. எதிர்நோக்கம் கொண்டதுமல்ல. கொள்கை ஒன்றே. கோட்பாடும் ஒன்றே. அங்கிருந்தவரில் பெரும்பாலோர்தான் இங்கு இருக்கின்றனர். குடும்பத் தலைவரின் போக்கு பிடிக்காத காரணத்தால், மக்கள் வேறு பண்ணையில் வசிக்கும் பண்பினைப் போல, தன்மையைப் போல, பகை உணர்ச்சி சற்றும் கிடையாது நமக்கு... அண்ணாவின் நீண்ட சொற்பொழிவு இப்படித் தொடர்ந்தது.
விடுதலை ஏடு தலையங்கம்:
தி.மு.க. தோற்றுவிக்கப்பட்டவுடன் 19.9.49 அன்று "விடுதலை'- இல் வெளியிட்ட தலையங்கம் வருமாறு:
நம்மால் வெறுக்கப்பட்ட பல தோழர்கள் உட்பட சிலரது ஆதரவு தோழர் அண்ணாதுரைக்கு கிடைத்தது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனாலும் நமக்கிருந்த கவலை எல்லாம் சீக்கிரத்தில் ஒரு முடிவு ஏற்படவேண்டுமே என்பதுதானே ஒழிய வேறு எவ்விதமும் கவலைப்படவில்லை. ஆகவே நல்ல வாய்ப்பாக 17.9.49 அன்று தொல்லைக்கு ஒரு முடிவு ஏற்பட்டது. என்ன முடிவு என்றால் கருத்து வேற்றுமையாளர்களும், தொல்லை கொடுத்து இருக்க வேண்டிய அவசியமுள்ளவர்களும் பிரிந்து போய், விலகிப்போய் தங்களுக்கு என்று ஒரு தனிக் கழகத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்தச் சம்பவத்தை நாம் மனமார வரவேற்கிறோம்.
இனி சில முக்கிய நிகழ்வுகள்:
சென்னை பவழக்காரத் தெருவில் தற்காலிகமாக இருந்த தி.மு.க. அலுவலகத்தை, தங்கசாலைத் தெரு, 208ஆம் எண்ணுள்ள கட்டடத்திற்கு மாற்றினார் அண்ணா. என்னதான் திருவொற்றியூர் சண்முகம் நமக்கு வேண்டியவரானாலும் "என் வீட்டில்தான் கழகம் இருக்கிறது' என்று வாய்தவறி ஒரு நாள் அவர் சொல்லிவிட்டால், இத்தனை பேர் பட்டபாடும் வீணாகிவிடும். நமக்கென்று ஒரு குச்சோ, குடிசையோ நம்முடையதாக இருக்க வேண்டும் என்றார் அண்ணா.
சம்பத்தின் "புது வாழ்வு' இதழ்:
"புது வாழ்வு' மலர்ந்திருக்கிறது மகிழ்ச்சி நமக்கு. இளைஞர் உலகின் மலர்ச்சி எழுத்துகள் புதுவாழ்வைப் பொலியச் செய்துள்ளன
தோழர்கள் ஈ.வெ.கி. சம்பத், க. அன்பழகன், இரா. செழியன், பூ. கணேசன் ஆகியவர்களின் கருத்தொளிகொண்டு புதுவாழ்வு மலர் பூக்கும் என்றும், தோழர்கள் கே.ஏ. மதியழகன், ப. வாணன், ஆகியோரின் எழுத்துகள் இதழுக்கு அழகூட்டும் என்றும் மலரை மக்களுக்குப் படைக்கும் பொறுப்பு தோழர் ஈ.வெ.கே. சம்பத்துடையது என்றும் அறிந்து மிக மிக அக மகிழ்கிறோம்.
ஆசிரியக்குழுவிலிருக்கும் தோழர் பூ. கணேசன் பட்டம் பெற்ற நாள்முதல் பத்திரிகைத் துறையிலீடுபட்டு, திறமையும் செயல்வன்மையும் கொண்டவர். விடுதலையின் உதவி ஆசிரியராகவும், நிலவு ஆசிரியராகவும் இருந்து தன் எழுத்தால் எண்ணத்தால் இளைஞருலகுக்கு மகிழ்வூட்டியவர். தோழர் க. அன்பழகன் புது வாழ்வு மாத இதழ் ஆசிரியராக இருந்து, தனது எழுத்தோவியங்களால் மக்களுக்கு நல்விருந்தளித்தவர். தனது கருத்துக் குவியல்களால் களிப்பூட்டியவர் தோழர் செழியன், மன்றம் மூலமாக மறுமலர்ச்சிப் பாதையில் சிந்தனை பதித்து இலட்சியத் தோட்டம் காட்டுபவர் தோழர் ப. வாணன் தோழர் மதியழகன் மாணவர்கழகத் தலைவர் சிறந்த எண்ணங்களைத் தருவார்.
பெரியார் கூற்றும், சம்பத் மறுப்பும்:
கழகத்தை உடைத்தால் அண்ணாதுரைக்கு ஆதாயம், சம்பத்துக்குப் பட்டை நாமம் என்று பெரியார் விடுத்த அறிக்கைக்கு ஈ.வெ.கி. சம்பத் சூடாகப் பதிலளித்தார்.
""கழகத்தை உடைத்தது நாங்களல்ல பொருந்தாத் திருமணத்தின் மூலம் பெரியார் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டார்.
அவரே கதியென்று இருந்த எண்ணற்ற இளைஞர்கள் அண்ணாவை வற்புறுத்தித் தலைமை ஏற்குமாறு கேட்டும், அந்தப் பேரறிவாளர் தலைமை நாற்காலி காலியாகவே இருக்கும் நான் எப்போதும்போல் பொதுச் செயலாளர் என்று அறிவித்துவிட்டார்.
"மூன்று எம்.ஏ. படித்துவிட்டு, பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை எல்லாம் இருந்தும் அண்ணாத்துரை என்னோடு ஏன் காடு மேடு சுற்ற வேண்டும்? அவர் காங்கிரசில் இருந்தால் மந்திரியாகி இருப்பார்' என்று பெரியார் கூறியதுண்டு.
இன்று அதே வாய்தான் என் அண்ணனை சுயநலமி என்றும் அவரால் நான் எதையோ இழந்துவிட்டது போலவும், எனக்குப் பட்டை நாமம் தீட்டிவிட்டார்கள் என்பது போலவும் சொல்கிறது மற்றவர்கள் சொல்லியிருந்தால் இது விஷமத்தனம், போக்கிரித்தனம். பெரியாரும் அந்த நிலைக்குக் கீழிறங்கிவிட்டார் என்பதுதான் உண்மையாகிறது.
இன்னமும் அவர் பந்த பாசங்களுக்கு இடம் தர வேண்டியதில்லை. வாரிசுப்பட்டம் சுமக்க வேண்டிய நான், சொத்துகளுக்கு அதிபதியாகவேண்டிய நான் வெளியேறி ஓட்டாண்டியாகி விடுவேன் என்று அவர் கருதுவதானால் நான் இப்போதும் அவருக்கும் நாட்டுக்கும் சொல்லிக்கொள்கிறேன், சொத்துகள் எனக்கு தூசு, அண்ணாவும் கழகமும்தான் நான் பெற்றுள்ள விலைமதிக்க முடியாத சொத்துகள். அந்த இரண்டும் எனக்குப் போதும். லட்சங்கள் எனக்கு வேண்டாம் லட்சியங்கள் எனக்குப் போதும். கோடிகள் எனக்கு வேண்டாம் கொள்கைகள் போதும்.
இனி எங்களுக்குப் பெரியார் பற்றிக் கவனமோ கவலையோ இல்லை. இளைஞர்களாகிய நாங்கள் இந்தச் சமுதாயத்திற்கு ஆற்றித் தீரவேண்டிய பணிகள் எண்ணிலடங்கா இதில் நாங்கள் வெற்றி காண்போம், அல்லது வீர மரணமெய்துவோம். எதுவாயினும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்''.
இவ்வாறு சம்பத் விட்ட அறிக்கை கழகத்தில் அனைவரையும் உருக வைத்தது. இளமையிலும் அவருடைய லட்சிய தாகத்தை, கொள்கைப் பற்றைக் குறைவின்றி வெளிப்படுத்தியது.
ஈ.வெ. கிருஷ்ணசாமி கருத்து:
பெரியாரின் அண்ணாரும், சம்பத்தின் தந்தையாருமான பெரியவர் ஈ.வெ. கிருஷ்ணசாமியிடம் கருத்துக் கேட்டபோது அவர் குறிப்பிட்டது:
""எங்களுடைய குடும்பத்தில் கொள்கைப் பிரச்சினையே தவிர சொத்துப் பிரச்சினை இல்லை. கொள்கை மாறுபாடு காரணமாக சம்பத் தன் குடும்பத்துடன் எங்கள் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறான். கருத்து மோதல் இருந்தாலும் இப்படியாகுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. சமுதாய மாற்றத்திற்குத் தம்பி (ராமசாமி) கடுமையாகப் பாடுபட்டு, கணிசமான வெற்றியும் கண்டிருக்கிறார். அது போலவே அரசியல் மாற்றத்திற்கும் அண்ணாதுரை, சம்பத் ஆகிய இளைஞர்களின் பணி வேண்டியதுதான். மற்றபடி குடும்ப நிலவரங்கள் பற்றி நான் சொல்வதற்கு எதுவுமில்லை....''
இவ்வாறு பெரியவர் ஈ.வெ.கிருஷ்ணசாமி வெகு கண்ணியமாகவும் வெளிப்படையாகவும் கருத்துக் கூறியிருந்தார்.
குற்றச்சாட்டும், பதில்களும்:
பெருவாரியானவர்கள் தம்மைவிட்டு போய்விட்டார்கள் என்னும் எரிச்சலில் பெரியார் விலகியோர் பற்றி மீண்டும் மீண்டும் துரோகிகள் பொதுவாழ்வில் வயிறு வளர்ப்பவர்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதில் அளித்த அண்ணா ஒரு பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அவர் சொன்னார்:
""நன்றாக நினைவிருக்கிறது ஒரு மோட்டாரில், பெரியாருடன் நானும் பொன்னம்பலனாரும், ஜோலார்பேட்டை பக்கமாகப் போய்க் கொண்டிருக்கிறோம், பத்தாண்டுகளுக்கு மேலிருக்கும், நான் சொன்னேன், பொது வாழ்க்கைக்கு நாற்பது வயதுக்கு மேல்தான் வரவேண்டும், ஏனெனில் நாற்பது வயதுவரை குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, குதூகலமாக இருந்துவிட்டு அனுபவிக்கவேண்டியதை அனுபவித்துவிட்டுப் பிறகு பொது வாழ்வில் புகுந்தால், உங்களைப் போல் மும்முரமாக தீவிரமாக வேலை செய்யமுடியும் என்றேன். முதுகைத் தட்டியபடி பெரியார் சொன்னார் முகமலர்ச்சியுடன், "நீ பைத்தியக்காரன். பொதுவாழ்வில் இருந்தபடி, வாழ்விலின்பத்தை அனுபவிக்க முடியாதா? என்ன உனக்கு அது தெரியவில்லை?' என்றார். அன்று இருந்து இன்று வரை, பொது வாழ்வைச் சொத்துக்காகப் பயன்படுத்தும் போக்கு என்னிடம் என்ன கண்டார்? கண்டிக்கும் உரிமை உண்டே அவருக்கு, எப்போதாவது என்னைக் கண்டிக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்ததா?''
சம்பத் கருத்து
பெரியாரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சம்பத் தமது புதுவாழ்வு இதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
நாடெங்கும் திராவிட முன்னேற்றக் கழகக் கிளைகள் தழைக்கின்றன. திராவிடர் கழக கொடிகள் பறந்த இடங்களில் இன்று தி.மு.க. கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன. பல இடங்களில் திராவிடர் கழகப் பெயர்ப்பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கெல்லாம் தி.மு.க. பணிகள் வேகமாகச் செயல்பட துவங்கிவிட்டன. பெரியாருக்கு இந்தக் காட்சிகள் கண்ணை உறுத்த தம்முடைய கூடாரத்திலே மிக நெருங்கிய, நம்பிக்கைக்குரிய, செயல்திறன் மிக்க தோழர்கள் பலபேரை காணவில்லையென்பது இயல்பாகவே எரிச்சலைத்தான் தரும்.
ஏதோ நாங்கள் நெடுநாள் திட்டமிட்டுச் சதி செய்து இப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டது என்று அவர் அங்கலாய்ப்பதில் பயனில்லை. கொள்கை முனையில் அவர் ஒரு மன்னிக்க முடியாத தவறைச் செய்தார். அவரைப் பொறுத்தவரை அவரால் உணர முடியவில்லை. யார் செய்தாலும் விளைவு இப்படித்தான் இருக்கும். அதற்கு அவர்தான் காரணம்.
நிலைமை எங்களை உண்டாக்கிற்று நிந்தனை எங்களை வளர்க்கிறது. நிலைமையை நாங்கள் உண்டாக்கவில்லை நிந்தனை கண்டு அஞ்சிப் பின்வாங்கி விட மாட்டோம்
இவ்வாறு சம்பத் அவ்விதழில் குறிப்பிட்டிருந்தார்.
சம்பத்தின் முழக்கம்
திராவிட முன்னேற்றக் கழக கூட்டங்களில், "திராவிட நாடு திராவிடருக்கே' முழக்கம் எதிரொலிக்கலாயிற்று.
அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், பொன்னம்பலனார், சி.பி. சிற்றரசு, டி.கே. சீனிவாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, காஞ்சி கல்யாணசுந்தரம், என்.எஸ். இளங்கோ, மதுரை முத்து, கே.வி.கே. சாமி, அலமேலு, அப்பாதுரை, சத்தியவாணிமுத்து, மு. கருணாநிதி, நாஞ்சில் மனோகரன், இளமுருகு, பொற்செல்வி, கோவை செழியன், சேலம் சித்தையன், ப.உ. சண்முகம், பூங்கோதை, ஆகிய எண்ணற்ற திராவிட இயக்க முன்னணிப் பேச்சாளர்கள் கண்டு காங்கிரஸ் பேரியக்கம் மருண்டது. பெரியாரை மட்டும் ஜீரணிக்க வேண்டிய எதிரியாகக் கருதிய காங்கிரஸ் இயக்கம், அவன் தம்பி அங்கதன் என்பதுபோல் தி.மு.க. வின் பிரச்சாரம் திக்கெட்டும் நடந்ததைக் கண்டு மெத்தவே அதிர்ச்சியுற்றது. அவர்களும் போட்டிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஆர்த்தெழுந்தது...
கட்டாய இந்தி ஒழிப்பு, சமூக நீதி, திராவிட நாடு மீது வழக்கு, ஆரியமாயை மீது தடை, பேச்சுரிமை எழுத்துரிமை போராட்டம், இலட்சிய வரலாறு வழக்கு, செல்வராஜ் மீது வழக்கு போன்ற பல்வேறு போராட்டங்களை தி.மு.க. எடுத்துக்கொண்டு நடத்தியதால் அவ்வியக்கம் பரபரப்புக்குள்ளானது.
கழக மேடைகளில் எழுச்சி
தமிழ் எழுத்தாளர் மாநாடு சென்னை மெமோரியல் மண்டபத்தில் அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் நடைபெற்றது. அண்ணாவின் எழுத்துகளை மதிக்கக் கூடிய கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற ஓரிருவரது விருப்பத்தால் அண்ணாவையும் அழைத்திருந்தனர்.
இவர் என்ன பேசப் போகிறார் என்று அசட்டையாக இருந்த எழுத்தாளர்கள் மத்தியில் அண்ணாவின் குரல் கம்பீரமாக ஒலிக்கத் தொடங்கியதும் எழுத்து மேதாவிகள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அண்ணாவின் பேச்சு அனைவர் மனத்தையும் கொள்ளை கொண்டது.
பாட்டாளியின் வியர்வை, உழைப்போரின் துன்பம், ஏழையின் ஏக்கம், அபலையின் கண்ணீர் இதெல்லாம் இந்த எழுத்தாளர்களுக்குத் தெரியாதவை. சமூகச் சூழ்நிலையை படம்பிடித்துக் காட்டி, சமுதாய மறுமலர்ச்சிக்கு உதவிடும் இலட்சிய எழுத்தாளர்கள் எண்ணற்றவர் தோன்ற வேண்டும்....
இப்படியெல்லாம் ஒரு மணி நேரம் அண்ணா பேசி முடித்ததும் காங்கிரஸ் அமைச்சர் அவினாசிலிங்கனார் அண்ணாவைக் கட்டித் தழுவிக் கொண்டார். கூட்டமும் கலைந்தது. யார் பேச்சும் எடுபடவில்லை.
இந்த மாநாட்டின் முன் வரிசையில் சம்பத்தும் அவரது தோழர்களும் காணப்பட்டனர். சம்பத் கருப்புச் சட்டை அணிந்து இந்த மாநாட்டுக்கு வந்திருந்தார்.
இந்த மாநாட்டில்தான் கண்ணதாசன் முதன் முதலில் சம்பத்திடம் தம்மை அறிமுகம் செய்துகொண்டார். புதுக்கோட்டையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட "திருமகள்' பத்திரிகையின் பிரதிநிதியாக அவர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டதோடு, அண்ணாவின் பேச்சை அப்படியே வரி விடாமல் எழுதி வெளியிட்டார்.
அண்ணாவும் சம்பத்தும் பல முறை விவாதித்து இந்தப் போக்கை மாற்ற விழைந்தனர். தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. பல மாவட்டங்களிலிருந்தும் எண்ணற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் திரண்டிருந்தனர். அவர்களுடைய கருத்துகளையெல்லாம் கேட்டபின் சம்பத் பேசி பின்னர் இறுதியாக பேச்சாளர்களுக்கு அண்ணா சில விளக்கங்களை அளித்தார்.
சம்பத் காட்டிய திசைவழி
இதுகாறும், இனவழிச் சிந்தனைக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தை, நிலவழிச் சிந்தனைக்கும், அரசியல் பொருளாதார வழிசிந்தனைக்கும் தரும் வகையில் நமது பேச்சும் எழுத்தும் அமைய வேண்டும் என்னும் சம்பத்தின் கருத்தை அண்ணா உட்பட அனைவரும் ஆதரித்தனர்.
பொதுக்கூட்டம் சிறப்புக்கூட்டம் மாவட்ட மாநில மாநாடுகள் என்று வகைப்படுத்தி அதற்கேற்ப பேச்சுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றார் சம்பத். அவர் மேலும் குறிப்பிடுகையில்
""வால்டேர், ரூசோ, லெனின், மார்ட்டின் லூதர், கமால் பாட்சா, காரல் மார்க்ஸ், இங்கர்சால், பெர்னாட்ஷா போன்ற மேதைகளின் வரலாற்றையும் கருத்துகளையும் இடை இடையே கூற வேண்டும். மொழிப் பாதுகாப்பு நமது மூலாதாரக் கொள்கை. முத்தமிழ் இனிமையையும் நாம் பறைசாற்ற வேண்டும். வடவர் ஏகாதிபத்தியத்தைத் துணிவோடு எதிர்க்க வேண்டும் . ஏகாதிபத்திய காங்கிரஸ் அரசின் குறைபாடுகளை விளக்கி நமது கொள்கைகளையும் திட்டங்களையும் தெளிவாக உரைக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளைத் தொடவேண்டும். நடைமுறையில் அவற்றிற்குப் பரிகாரம் காணவேண்டும். போர்க்குணம் படைத்தவர்களாக, எந்தத் தியாகத்திற்கும் நாம் சித்தமாக வேண்டும். எக்காரணம் கொண்டும் தனி மனித வழிபாடு கூடாது...'' என்றெல்லாம் சம்பத் மிக அழுத்தமாகவே எடுத்துரைத்தார்.
இறுதியாகப் பேசிய அண்ணா, ""இரு கழகங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிச் என்றும் எக்காரணங்கொண்டும் பெரியாரை விமர்சிக்கவோ, தாக்கவோ கூடாது என்றும் அவர் என்னதான் நம்மை இழிவுபடுத்தினாலும் தாங்கிக்கொண்டு அவரைப் பெருமைப்படுத்தும் வகையில்தான் நமது பேச்சும் எழுத்தும் அமைய வேண்டும்'' என்றும் அண்ணா கேட்டுக்கொண்டார்.
கே.ஏ. மதியழகன் திராவிட மாணவர் கழகம் செயல்படுவதற்கான அறிக்கையை அமைப்பாளர் என்ற பொறுப்பில் வெளியிட்டார். இதன் விளைவாக மாணவர் அணி திரண்டது.
பெரியாரைத் தாக்கிப் பேசக்கூடாது என்று விதித்த கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்ட வேலூர் இரத்தினவேல் எனும் கழகப் பேச்சாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கழகத்திலிருந்து ஓராண்டுக்காலம் நீக்கி வைக்கப்பட்டார்.
(தொடரும்)
தொகுத்து எழுதியவர்கள் :
என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்.