கண்டது
(புதுக்கோட்டையில் உள்ளஒரு துணிக்கடையின் பெயர்)
வாழை மரத்து ஜவுளிக்கடை
எஸ்.பி.பாலு, புதுக்கோட்டை.
(மேட்டுப்பாளையம் அமுதம் சிறப்பங்காடியில்)
பொருளின்றி வாழ்ந்தாலும்
போதையின்றி வாழ்
யாஸ்மின் பாபு, மேட்டுப்பாளையம்.
(திருநெல்வேலியில் உள்ள ஒரு ENT கிளினிக்கில்)
SWITCH OFF YOUR CELL PHONE AND
WORRIES HERE
பாளை பசும்பொன், நெல்லை.
(இராஜபாளையம் ஆட்டோ ஒன்றில்)
கஷ்டப்பட்ட காலத்தை நீ மறந்துவிடு
கஷ்டப்பட வைத்த காலத்தின் பாடத்தை மறந்துவிடாதே
எம்.கே.எஸ்.மணி, சேத்தூர்.
(சென்னை பாரிமுனை நகலகம் ஒன்றில்)
உலகத்தைப் பார்த்து வாழ்பவர்கள் சாதாரணமானவர்கள்
உலகம் பார்க்க வாழ்பவர்கள் சாதனையாளர்கள்
டி.எஸ்.பாலு, சென்னை-73.
(மதுரை விஸ்வநாதபுரத்தில் ஒரு காரின் பின்புறத்தில்)
பாத்து வாப்பா
பங்காளி
எம்.தர்மலிங்கம், விஸ்வநாதபுரம், மதுரை.
கேட்டது
(ஏரல் கடை வீதியில் இருவர்)
""என்ன சார் வெயில் கொளுத்துது? உங்களிடம் அவர் மழை வருமா?ன்னு கேட்டுட்டுப் போறார்? ''
""அவர் ரொம்ப நல்ல மனுசன் சார். அவர்ட்ட நான் கடன் வாங்கியிருக்கேன். அதைத்தான் அவ்வளவு நாகரிகமாகக் கேட்டுட்டுப் போறார்''
அ.நந்தகுமார், ஏரல்.
(பம்மல் மெயின் ரோட்டில்)
""வாங்க... வாங்க... பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நீங்க செய்யிற பிள்ளையார் கோயில் திருப்பணி எல்லாம் எப்படி இருக்கு?''
""கோயில் கட்டிக்கிட்டிருக்கோம். இன்னும் ரெண்டு மாசத்துல கும்பாபிஷேகம் நடத்தப் போறோம்''
""திருப்பணிக்கு நாங்க ஏதும் உதவி செய்யணுமா?''
""கும்பாபிஷேகம் முடிஞ்சப்புறம்தான் உங்க உதவி தேவை''
""என்ன உதவி? சொல்லுங்க... ரெடியா இருக்கோம்''
""ஒண்ணுமில்லை. கும்பாபிஷேகம் முடிஞ்சப்புறம் நீங்க பிள்ளையார் சிலையைத் தூக்கிட்டுப் போகாம இருக்கணும்''
நெ.இராமன், சென்னை-74.
(ரங்கசமுத்திரம் டீக்கடை ஒன்றில்)
அவன்: இந்த பொடியன் யாரோட பையன்?
இவன்: எங்க அண்ணனோட தம்பி மகன்
அவன்: அப்போ உன்னோட மகனில்லையா... உன் ஜாடையில இருக்கானே?
இவன்: அட... வாழை மட்டை மண்டையா... நல்லா யோசிச்சு பாரு... அண்ணனோட தம்பி யாரு... நான்தானே... அப்போ அவன் என்மகன்தான் நல்லா புரிஞ்சுக்கோ?
அவன்: ...? ...? ...?
ஏ.ஜே.ஜபீன்பேகம், சத்தியமங்கலம்.
(சிதம்பரம் டவுன் பஸ்ஸில் இரு கல்லூரி மாணவர்களின் கடி ஜோக்)
""மச்சான் கொசு கடிக்காத மற்றொரு உயிரினம் எது?''
""தெரியலையே மச்சான்''
""கொசுதான்''
அ.குணசேகரன், புவனகிரி.
(கோபி செட்டி பாளையம் கச்சேரி மேட்டில் ஒரு காய்கறி கடையில்)
காய் வாங்க வந்தவர்: சின்ன வெங்காயம் என்ன விலை?
கடைக்காரர்: கிலோ இருபது ரூபாய்
காய் வாங்க வந்தவர்: சொல்லிக் கொடுங்க
கடைக்காரர்: என்னத்தைச் சொல்லிக் கொடுக்குறது? வேணும்னா ஒரு பாடப் புத்தகத்தை எடுத்துட்டு வாங்க. சொல்லிக் கொடுக்குறேன்.
ஏ.ஜாஸ்மின், சத்தியமங்கலம்.
மைக்ரோ கதை
ஒரு புத்தகக் கடைக்குப் புத்தகம் வாங்க ஒருவர் வந்தார். கடை விற்பனையாளரிடம் "ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி?' என்ற புத்தகம் இருக்கிறதா? என்று கேட்டார்.
விற்பனையாளர், ""இருக்கிறது'' என்றார்.
""ஒரு புத்தகம் கொடுங்கள்''
""சார் சின்ன சந்தேகம் கேட்கலாமா?'' என்றார் விற்பனையாளர்.
""கேளுங்கள்''
""புத்தகத்தைப் படிக்காத போது ஏன் புத்தகத்தை வீண் செலவு செய்து வாங்குகிறீர்கள்?'' என்று கேட்ட விற்பனையாளரிடம், ""நான் புத்தகத்தைப் படிக்கவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று எரிந்து விழுந்தார் வாடிக்கையாளர்.
""நீங்கள் இப்போது வாங்கிய புத்தகத்தை ஏற்கெனவே 9 தடவை வாங்கியிருக்கிறீர்கள்?'' என்றார் விற்பனையாளர்.
ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.
ஓர் அரசன் எப்போதும் துன்பப்பட்டுக் கொண்டேயிருந்தார். துன்பத்தை நீக்க பல வழிகளில் முயன்றார். பலனில்லை. இறுதியில் ஒரு வேதாந்தியை அழைத்து யோசனை கேட்டார்.
""உன் ராஜ்யத்துக்குள்ளே போதுமென்ற மனதுடைய ஒருவனைக் கண்டுபிடித்து அவனது சட்டையை வாங்கி அணிந்து கொண்டாயானால், துன்பம் அனைத்தும் உன்னை விட்டு விலகி பறந்து போய்விடும்'' என்று அவர் யோசனை சொன்னார்.
அரசன் தன் வீரர்களை அனுப்பி, ""போதுமென்ற மனதுடைய மனிதன் எங்கேயாவது வாழ்கின்றானா, அவனுடைய சட்டையைக் கேட்டு வாங்கி வாருங்கள்'' என்று உத்தரவு இட்டான்.
எங்கெங்கோ தேடிக் கடைசியில் அப்படிப்பட்ட ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் அவனிடம் சட்டை இல்லை.
ஜே.மகரூப், குலசேகரன்பட்டினம்.
செல்மொழி
பணம் வரும்... போகும்
பதவி வரும்... போகும்
காதல் வரும்... போகும்
ஆனால்
என் "எஸ்எம்எஸ்' மட்டும் வந்து கொண்டேயிருக்கும்.
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.