சைவ சித்தாந்தத்தில் சமயக் குரவர்கள் நால்வர் பக்தி நெறியைப் பரப்பியதைப் போல, விடுதலை வேள்வியிலும் "வாலாஜா நால்வர்' என்று நான்கு பெருமக்கள் தேசபக்தியைப் பரப்பி உள்ளனர். வேலூர் மாவட்டம் வாலாஜாவை மையமாக வைத்து, கே.ஆர்.கல்யாணராமைய்யர், ஜமதக்னி, ஆக்கூர் அனந்தாச்சாரி, சுந்தரவரதன் ஆகிய நால்வரும் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, இப்பகுதி மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டியதை தமிழக சுதந்திரப் போராட்டம் பற்றி படித்த அனைவரும் உணர்வர். இவர்களில் ஒருவரான ஜமதக்னி (1901 - 1981) அரக்கோணத்தில் நடந்த கள்ளுக்கடை மறியலின் போது தன்னைக் கத்தியால் குத்திய ஒரு கயவனைப் போலீசார் பிடித்து வழக்குத் தொடர கேட்டபோது, அவனது அறியாமைக்காக இரங்கி, காந்திய வழியில் மன்னித்தார். 1924 இல் சைமன் கமிஷன் மறுப்பு இயக்கம் 1932 இல் சட்ட மறுப்பு இயக்கம், 1942 இல் இரண்டாம் உலகப் போர் எதிர்ப்புக் காரணம் ஆகியவற்றுக்காக மும்முறை சிறை சென்றவர்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஜமதக்னியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானதாகும்.
அந்நிய துணிகளுக்கு எதிராக, மக்களைப் போராடத் தூண்டுவதற்காக ஜமதக்னி சென்னை சென்றார். சைனா பஜார் எதிரில் நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட ஜமதக்னிக்கு, காவல்துறையினரின் கண்மூடித்தனமான தர்ம அடி கிடைத்தது.
என்னதான் இளைஞராக இருந்தாலும் எவ்வளவு அடியை அவரால் தாங்க இயலும்?
அவருக்கு மட்டுமல்லாமல், இதர தொண்டர்களுக்கும் இதே கதிதான். உடலில் பலமிருந்ததால் மற்றவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். அதற்குச் சிலநாள் முன்பு சென்னைக் கடற்கரையில் உப்புக் காய்ச்சச் சென்றபோது, ஏற்கனவே மரண அடி வாங்கியிருந்த, அவர் இந்த தர்ம அடியால் சுயநினைவிழந்தார். விழுந்து கிடந்த அவரை இறந்ததாகக் கருதி காவலரும் விட்டுச் சென்றனர்.
அவர் கண் விழித்த போது, ஒரு வீட்டிற்குள், கட்டில் மெத்தை மீது படுத்துக் கிடந்ததையும் பக்கத்தில் ஓர் அழகிய மங்கை இருந்ததையும் உணர்ந்தார். உடலெல்லாம் பலத்த காயம் இருந்ததால் முழுவதுமாக நினைவு வரவில்லை. மூன்று நாட்கள் இப்படியே கழிந்தது.
பேசும் நிலைக்கு அவர் வந்தததும், அப்பெண்மணியிடம், ""அம்மா நான் எப்படி இங்கு வந்தேன்? நீ யாரம்மா?'' என்றார்.
அதற்கு அந்தப் பெண்மணி, ""நீங்கள் மூன்று நாட்கள் முன்னர் நடந்த அந்நியத் துணிக்கடைக்கு முன் காவலர்களால் அடிக்கப்பட்டு கிடந்தீர். நான், எனது அம்மா மற்றும் பக்கத்து வீட்டுக்காரர், மூவரும் சேர்ந்து உங்களை எங்கள் வீட்டிற்குத் தூக்கி வந்தோம்''.
""இந்த மருத்துவச் சிகிச்சை?''
""ஆம். நாங்கள்தான் ஏற்பாடு செய்தோம்''
""செலவு?''
""எங்களுக்கு ஒரு பைசா செலவில்லை. டாக்டரை கூட்டி வந்ததோடு சரி. நீங்கள் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதாலும், டாக்டரே கதர் சட்டைப் பிரியர் என்பதாலும் அவரே இலவசமாகத்தான் மருத்துவம் பார்த்து, இந்தக் கட்டெல்லாம் போட்டுச் சென்றார் ''
""உங்களுக்கும் அந்த மருத்துவருக்கும் நன்றி. நான் வாலாஜா செல்ல விரும்புகிறேன். போய் வரட்டுமா?''
""கூடாது... கூடாது. இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுத்தால்தான் உங்கள் உடல் தேறுமாம், டாக்டர் கண்டிப்பாகக் கூறிச் சென்றார்''
""ஓ.... இப்படியும் சிலர் இந்த மெட்ராசில் இருப்பதைக் கண்டு எனக்குப் பெருமகிழ்ச்சி''
""......''
""நான் முதலில் கேட்ட கேள்விக்கு பதிலே கூறவில்லையே. இப்போதும் கேட்கிறேன். நீ யார்? உன் கணவரை இதுவரை நான் ஒருபோதும் காணவில்லையே''
""......''
""என்னம்மா பேசாமலிருக்கிறாய்?''
""என்னத்தைச் சொல்வது? சொல்வதற்கு என்னிடம் ஏதுமில்லை''
""அப்படி என்ன கேட்டுவிட்டேன். உன்னைப் பார்த்துத்தானே கேட்டேன்''
""சுருக்கமாகச் சொல்வதானால் எனக்கென்று குடும்பமில்லை. வசதிகளுக்கும் குறைவில்லை''
""அப்படியானால்?''
""வருவோர் போவோர் தரும் பணம் கொண்டு பிழைப்பு நடத்துகிறோம்''
""புரிந்ததம்மா, புரிந்தது. முன்பின் தெரியாத என்னிடம் நீ இவ்வளவு இரக்க மனம் கொண்டவளாய் இருக்கிறாய். நீ எப்படியம்மா இந்தப் பாவச் செயலை செய்து கொண்டிருக்கிறாய்?''
""நானாக விரும்பிச் செய்யவில்லை. எனது குடும்பச் சூழ்நிலையாலும், எனது தாயாரின் நிர்ப்பந்தத்தாலும் இதில் உழன்று கொண்டிருக்கிறேன்''
""நீ மனம் திருந்தி சகஜ வாழ்வு வாழலாமே''
""ஆம். அதற்காகத்தான் முயற்சித்து வருகின்றேன். உங்களைக் கண்டது முதல் கதர் சேலை வாங்கி உடுத்தியிருக்கின்றேன். நூல் நூற்பதற்காக கைராட்டினமும் வாங்கி விட்டேன்.''
""காந்தியின் கொள்கை இப்படி உன்வரையில் பரவியதைக் குறித்து மகிழ்ச்சியே. காந்தியடிகளின் தெய்வீக சக்தியினால்தான் இது எல்லாம் சாத்தியமாயிற்று. நீயும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு எடுக்கலாமே?''
""கண்டிப்பாக. அதற்குள் சில ஏற்பாடுகள் செய்திட வேண்டும்'' இந்த உரையாடலுக்குப் பின் சில நாட்கள் ஜமதக்னி அந்த வீட்டிலேயே தங்கியிருந்தார்.
ஒருநாள் இரவு அந்தப் பெண்மணி கட்டிலில் படுத்திருந்த ஜமதக்னியை நெருங்கி அவருடைய வலக்கையை எடுத்து தனது இருகைகளாலும் மெல்ல அழுத்திப் பிடித்தவாறு இருந்தாள். விழித்துப் பார்த்த ஜமதக்னிக்கு, சிங்காரித்திருந்த பெண்மணியின் சிருங்காரப் பார்வை புரிந்தது. சாதாரணமான உள்ளமாக இருந்தால் அந்தப் பார்வைக்குப் பலியாகி பாவைக்கும் உடன்பட்டிருக்கும். சுதந்திர வேள்வியில் சுடர்விட்ட நெஞ்சமல்லவா ஜமதக்னியுடையது? எனவே உறுதியான மனத்துடன் மறுத்தார்.
பதறித் துடித்து அப்பெண்மணியின் காலில் விழுந்தார்.
""தாயே, தாயினும் சிறந்தவளே... நான் ஒரு சத்தியாகிரகி. மகளிரைத் தாயாகப் பார்க்கும் எனது விரதத்தைக் காத்திட நீயும் உதவி செய்''
""ஒரு நிமிடம் அப்படித் தவறாக நினைத்துவிட்டேன். என்னை மன்னியுங்கள். நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கலாமா?''
""என்னை உங்கள் துணைவியாக ஏற்றுக் கொள்ளுங்களேன்''
""அதுவும் முடியாதம்மா. ஏனெனில் கர்னல் நீலன் சிலை அகற்றும் சத்தியாக்கிரகப் போராட்டதின் போது என்னுடன் கலந்து கொண்ட கடலூர் முருகப்படையாட்சி -அஞ்சலையம்மா தம்பதியின் மகள் லீலாவதியை மணம் முடிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். அந்த லீலாவதியும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக தற்போது சிறார்கள் சிறையில் உள்ளாள்''
""இவ்வகையிலும் நான் துரதிருஷ்டம் கொண்டவள்தானா?''
""அப்படிச் சொல்லக்கூடாது. காந்தியடிகளின் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றுவா, அப்போது இந்த துரதிருஷ்ட எண்ணம் உனக்கு இருக்காது''
""கண்டிப்பாக அப்படியே செல்கிறேன்'' என்று உறுதியளித்தார். புதுவாழ்வுக்குத் திரும்பிய அப்பெண்மணி.
இனியும் அவ்வீட்டில் இருக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்ட ஜமதக்னி மறுநாளே வாலாஜா திரும்பினார்.
இத்தகைய மன உறுதியால்தான் சுதந்திரப் போரிலும், சுதந்திரத்துக்கு பின் சமூக மறுமலர்ச்சிக்காகவும் அவரால் போராட முடிந்தது. சைவ நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் இறந்த பெண்ணின் சாம்பலிலிருந்து அப்பெண்ணை உயிர்ப்பித்தார். வாலாஜா நால்வரில் ஒருவரான ஜமதக்னியோ வாழ்க்கைப் பாதையிலிருந்து விலகிய பெண்ணை மனம் திருந்தச் செய்து, விடுதலை வேள்வியில் ஈடுபட வைத்தார்.
தனது சுதந்திரப் போராட்ட நண்பர் ஆக்கூர் அனந்தாச்சாரியை அழைத்துக் கொண்டு, மீண்டும் சென்னை சென்ற ஜமதக்னி அப்பெண்மணியை முழுநேர சத்தியாகிரகியாக்கினார். பல பேராட்டங்களில் கலந்து கொண்ட அப்பெண்மணி, அதன் காரணமாகச் சிறைக்கும் சென்றிருக்கிறார்.
இத்தகைய ஒழுக்க சீலரான இவர், தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் முதலிய மொழிகளைச் சிறையிலிருந்தபோது படித்து, அவற்றில் நூல்கள் எழுதும் அளவுக்குப் புலமை பெற்றார். "கனிந்த காதல்' அல்லது "ததும்பும் தேசபக்தி', "சீமகா பக்த விஜயம்', "மார்க்சீயம் (அ) சமூக மாறுதலின் விஞ்ஞானம்', "நீ ஏன் சோசலிஸ்டாக வேண்டும்?', "இந்தியாவில் சோசலிஷம்', "தேசிய கீதம்' ஆகிய நூல்களும் திருமுருகாற்றுப்படை, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, குமரேச சதகம் ஆகிய நூல்களுக்கு உரையும், காமாயினி, ரகுவம்சம், மேக சந்தேசம், வால்மீகி ராமாயணம் போன்ற வடமொழி நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சீனா சென்று மாசேதுங்கைச் சந்தித்து அளவளாவிய முதல் தமிழர். கார்ல் மார்க்ஸின் "மூலதனம்' நூலை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
தமிழக அரசு 2009 இல் இவருடைய நூல்களை நாட்டுடமையாக்கியது.
(ஆதாரம் : ஆக்கூர் அனந்தாச்சாரியார் எழுதிய "அரசியல் நினைவு அலைகள்')