Enable Javscript for better performance
யதார்த்தமான கலை இயக்கத்தைப் புரிந்துகொள்ளும் தன்மை தமிழ்த்திரைப்பட உலகில் உல்லை...- Dinamani

சுடச்சுட

  

  யதார்த்தமான கலை இயக்கத்தைப் புரிந்துகொள்ளும் தன்மை தமிழ்த்திரைப்பட உலகில் உல்லை...

  Published on : 20th September 2012 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  k1

  ஓவியர், நவீன நாடகக்காரர், திரைப்படக் கலை இயக்குநர் எனப் பலமுகங்கள் கொண்டவர் பி. கிருஷ்ணமூர்த்தி. கன்னடம், மலையாளம், தமிழ், ஆங்கிலம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் உருவான திரைப் படங்களில் கலை இயக்கம் செய்தவர்.

  கலை இயக்கத்திற்காக மூன்று தேசிய விருதுகள்,பல மாநில விருதுகள் பெற்றுள்ளவர். எளிமை, அன்பு, கடும் உழைப்பு இதுவே பி.கிருஷ்ணமூர்த்தி. நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் கலை இயக்கம் செய்துள்ள இவர் பூம்புகார் பகுதியைச் சேரந்தவர். இவரிடம் கலை இயக்கம் பற்றி ஒரு நேர்காணல்.

  ஓவியம், நவீன நாடகத்திலிருந்து திரைப்படக் கலை இயக்கத்திற்கு எப்படிப் போனீர்கள்?

  எனக்கு அப்போதே ஓவியம், நாடகம் மட்டுமல்லாது இசை, நடனம், போன்றவற்றில் அதீத ஈடுபாடு .பாடகர் பாலமுரளி கிருஷ்ணா, வீணை பாலசந்தர், புல்லாங்குழல் ரமணி இவர்கள்மேல் எல்லாம் தனிப்பட்ட பற்று. புகழ்பெற்ற கன்னட திரைப்பட இயக்குநர் ஜீ.வி. அய்யரின் "ஹம்சகீதே' படம்தான் நான் கலை இயக்கம் செய்த முதல் திரைப்படம்.

  ஜீ.வி. அய்யரிடம் 1968ஆம் ஆண்டு என்னை அறிமுகப்படுத்தியவர் கன்னட மொழிக் கவிஞர் திவாகர். ஜீ.வி.அய்யர் என்னிடம் "ஹம்சகீதே' படக்கதையை மூன்று நாட்கள் சொன்னார். அப்போது நான் பல திருத்தங்கள் சொன்னேன். அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டு என்னைப் பாராட்டவும் செய்தார்.

  அந்தப் படம் ஆரம்பிக்கும் முன் கலை இயக்கம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. ஆனால் நான் பயின்ற ஓவியக்கலையாலும் என் இயல்பான கற்பனைத் திறனாலும் நான் செய்த கலை இயக்கம் பாராட்டப்பட்டது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், படத்தின் இசையமைப்பாளர் பாலமுரளி கிருஷ்ணா. ஒளிப்பதிவாளரோ புகழ்பெற்ற நிமாய்கோஷ் இவர்களிடையே நான் மட்டும் புதியவன்.

  ஜீ.வி.அய்யருடன் எத்தனை படங்கள் பணிபுரிந்தீர்கள்?

  "ஹம்சகீதே' படம் வெளிவந்த பிறகுகூட என்னை சினிமா கலை இயக்குநராக வெளியில் யாருக்கும் தெரியாது. வேறு யாரிடமும் பணிபுரியவில்லை. ஆதிசங்கரர், மத்வாச்சாரியார், ராமானுஜச்சாரியார் இப்படி ஜீ.வி.அய்யர் அடுத்தடுத்து எடுத்த படங்களில் மட்டுமே பணிபுரிந்து வந்தேன். இருபது வருடங்கள் குருகுலவாசம்போல் அவரிடம் பணியாற்றினேன்.

  ]

  அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். அவரிடம் பணிபுரிந்ததில் பொருளாதாரரீதியாக பலன் ஏதும் எனக்கு இல்லை. ஏனென்றால் அவர் லட்ச ரூபாயில் ஒரு படம் எடுத்தவர். ஒளிப்பதிவாளர், நடிகர், மற்றும் சம்பந்தப்பட்ட எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் அவரது வீட்டில்தான் சாப்பாடு. கிடைக்கும் சத்திரம் சாவடியில் தங்கிக் கொள்வோம். எல்லோரிடமும் கலைவெறி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததால் யாரும் பணத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பெரிய விஷயம் ஏதோ செய்கிறோம் என்றே எல்லோரும் நினைத்தார்கள்.

  மலையாளத்திற்கு எப்போது போனீர்கள்?

  ஜி.வி. அய்யரின் "மத்வாச்சாரியார்' படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அந்தப் படத்தின் மூலம் எனக்கும் தேசிய விருது கிடைத்தது. அப்போதுதான் மலையாளத்திலிருந்து வாய்ப்பு வந்தது. முதல் படம் "சுவாதித்திருநாள்'. அடுத்து "வைசாலி'. "ஒரு வடக்கன் வீரகதா', "பெருந்தச்சன்'. இவை எல்லாமே விருது பெற்ற படங்கள். "ஒரு வடக்கன் வீர கதா'விற்கு எனக்கு தேசிய விருதும் கிடைத்தது. மலையாளத்தில் தொடர்ந்து 15 படங்கள் வரை செய்தேன். எல்லாம் தரமான படங்கள். கேரளா மக்கள் என்னைக் கொண்டாடினார்கள். அப்போது மலையாளப் பத்திரிகைகளில் என்னைப் பற்றி செய்திகள் வந்துகொண்டே இருந்தன.

  தமிழுக்கு எப்போது வந்தீர்கள்?

  பதில் : கர்நாடகாவில் ஒருவிதமான புகழ் என்றால் கேரளாவில் இன்னொரு விதமான புகழ். அந்தச் சமயம் தமிழ் சினிமா உலகில் என்னை யாருக்கும் தெரியாது. பாரதிராஜாவின் "நாடோடித் தென்றல்' படம் மூலமாகத்தான் தமிழில் என்னைத் தெரியும். ஆனால் அதற்கு முன்பாகவே ஸ்ரீதர் ராஜனின் "கண் சிவந்தால் மண் சிவக்கும்' என்ற படம் செய்திருந்தேன். அதுதான் தமிழில் என் முதல் படம். பாலு மகேந்திராவின் "வண்ண வண்ண பூக்கள்', "பாரதி', "நான் கடவுள்', " இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' இப்படி நிறையப் படங்களில் பணிபுரிந்துள்ளேன்.

  பல இந்திய மொழிகளில் கலை இயக்கம் செய்துள்ளீர்கள். கலை இயக்கத்திற்கு மொழி ஒரு பிரச்னை இல்லையா?

  கலை இயக்கத்திற்கு மொழி தேவையில்லை. இன்னொரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால், தென்னிந்தியா முழுமைக்கும் ஒரே கலாசாரம்தான். தமிழ்நாட்டில் அழிந்துபோன கலாச்சாரம் எல்லாம் கன்னடம், மலையாளத்தில் பார்க்க முடிகிறது. "ஹம்சகீதே' படப்பணியின்போது ஒரிஜினல் தஞ்சாவூர் பாணி ஓவியங்களை நஞ்சன்கூடு என்ற இடத்தில் வீடுவீடாகப் போய் 100 ஓவியங்களைச் சேகரித்தேன்.

  படத்தின் கதை தன்மைக்கேற்ப பழைமையின் யதார்த்தம் மாறாமல் இருந்ததால்தான் "மத்வாச்சாரியார்' படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல மலையாளத்தில் "ஒரு வடக்கன் வீர கதா', தமிழில் "பாரதி' படங்களுக்கும் தேசிய விருது கிடைத்தது. அதற்குக் காரணம் அதிக நம்பகத்தன்மையை கலை இயக்கம் கொடுத்ததுதான். அந்தந்தக் காலக்கட்டத்தை தத்ரூபமாக செயற்கையாகத் தெரியாமல் கலை இயக்கம் அமைய வேண்டும். கலை இயக்கத்திற்கு மொழி ஒரு பிரச்னையாக எனக்கு ஆனதில்லை.

  பிற மொழிப்படங்களில் பணிபுரிவதற்கும் தமிழ் படங்களில் பணிபுரிவதற்கும் என்ன வேறுபாட்டை உணர்ந்தீர்கள்?

  மலையாளப் படங்களில் யதார்த்த நிலையில் எல்லாம் செய்ய முடியும். அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். கலை நயத்துடன் எவ்வளவு சிரமப்பட்டு செய்கிறோமோ அதை அங்கு பாராட்டுவார்கள். கன்னடப் படங்களிலும் ஓரளவு இது போன்ற வரவேற்பு இருக்கும். ஆனால் தமிழ்ப் படங்களில் மட்டும் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யதார்த்தத்தை மீறி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. இது தமிழ் படத்தின் குறையா அல்லது கலை இயக்குநரின் குறையா எனத் தெரியவில்லை. எதைச் செய்தாலும் ஒரு பிரமாண்டம் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். பிரமாண்டம் என எதையோ நினைத்துக்கொண்டு நம்மிடம் எதிர்பார்ப்பார்கள்.

  படத்தின் நம்பகத் தன்மை சார்ந்து யதார்த்தமாக செய்தால் , இங்கு ஒன்றுமே செய்யவில்லையே என நினைக்கிறார்கள். மிகையாக ஏதாவது வர்ணம் பூசினால்தான் அவர்களுக்கு ஒரு சந்தோசம் கிடைக்கிறது. சின்ன சின்ன விசயங்களைகூட யதார்த்தத்தை மீறி செய்தால்தான், ஒரு கலை இயக்குநராகவே ஏற்றுக் கொள்கிறார்கள். உண்மையான கலை இயக்கத்தை மதிக்கும் பண்பு இல்லை. ஆனால் இப்போது சில நவீன இயக்குநர்கள் கலை இயக்கத்தை புரிந்துகொள்ளும் தன்மையுடன் வந்துள்ளார்கள். முன்பு இப்படி ஒரு சிலரைக்கூடப் பார்க்கமுடியாது.

  பாலாவின் "நான் கடவுள்', சிம்பு தேவனின் "இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்?

  பாலா எனது விருப்பத்திற்கு விட்டு விட்டுவிட்டார். நான் என்ன செய்கிறேனோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வார். எதிலும் தலையிடமாட்டார். என் வேலை முடிந்தவுடன்தான் அவர் படப்படிப்பு இடத்திற்கே வருவார். என்னை ஓய்வெடுக்க சொல்லிவிடுவார். அவர் அவரது வேலையை முடித்துவிட்டு போய்விடுவார். இவரைப்போலவே மலையாளத்தில் இயக்குநர் அரிகரன். பாலாவை, "வண்ண வண்ணப்பூக்கள்' பட சமயத்திலேயே தெரியும்.

  சிம்பு தேவனும் எதிலும் தலையிடமாட்டார். அந்தப்படத்தில் மிகக் குறைவான செலவில் நல்ல தரத்துடன் செட் அமைத்துக் கொடுத்தேன். அந்தப்படத்தின் மிகப் பெரிய பலம் கலை இயக்கம்.

  தமிழ் திரைப்பட இயக்குநர்கள், கலை இயக்குநர்களை எப்படிப் பார்க்கிறார்கள்?

  அதைச் சொல்வது கொஞ்சம் கஷ்டம்.பொதுவாக மற்ற மொழிப் படங்களில் முழுக்க வேளையில் மூழ்கி விடுவேன். தமிழ் படங்களில் என்னால் அப்படி இருக்க முடிந்ததில்லை. அதற்கு முக்கிய காரணம், இயக்குநர்களுக்கும், கலை இயக்குநர்களுக்கும் ஒரு திரை உள்ளது. கன்னடம்,மலையாளம் போன்றவற்றில் எந்த திரையும் கிடையாது. எனக்கு மொழி தெரியாவிட்டாலும் கன்னடம்,மலையாளம் பட இயக்குநர்களிடம் நல்ல அலைவரிசை இருந்தது. நல்ல சுதந்திரம் உண்டு. தமிழில் அப்படி இல்லை. இதற்குமேல் இதைப் பற்றி பேச விரும்பவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai