சுடச்சுட

  
  kdr1

  "எங்க வீட்டுப்பெண்' இயக்குநர் அனுபவம் குறித்து என் தந்தையார் சொன்னது தொடர்கிறது.

  அப்போது  கே.வி.மகாதேவன்,""ரெட்டியார்... உங்களோட எங்க வீட்டுப் பெண் படத்தில் பாடல்கள் நன்றாக அமைந்திருந்தன. ஆனால் படம் நன்றாக ஓடாத காரணத்தால் பாடல்கள் பிரபலமாகவில்லை. குறிப்பாக எங்க வீட்டுப் பெண் படத்தில் வரும் "கால்களே நில்லுங்கள்' என்ற பாடலின் மெலடி மெட்டு என் மனதில் நெருடலாகவே இருந்தது.

  அந்த மெட்டை அடிப்படையாகக் கொண்டு வேறு படத்தில் இசையமைத்து பிரபலப்படுத்த விரும்பி, வாய்ப்புக்காக காத்திருந்தேன். அதுவும் வந்தது. அதே மெலடி மெட்டை ஸ்பீட் பீட்டில் போட மாட்டுக்கார வேலன் படத்தில்... பட்டிக்காடா பட்டணமா  என்ற எம்.ஜி.ஆர். பாடல் வாயிலாக என் ஆசை நிறைவேறியது'' என்று சொல்லி மகிழ்ந்தார் கே.வி. மகாதேவன்.

  இதை எதற்காக இங்கே சொல்கிறேன் என்றால், அன்று எம்.ஆர். ராதா சொன்ன கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே.

  "எங்க வீட்டுப் பெண்' படம் தயாரிப்பில் இருந்தபோது, ஒருநாள் எம்.ஆர். ராதா, என்னிடம் ""இந்த மாதிரி படங்கள் இன்றைய ஜனங்களுக்குப் பிடிக்காது'' - என்று வெளிப்படையாகச் சொல்லி விமர்சித்தார்.

  ராதா சொன்ன மாதிரி, மாறிக் கொண்டே வரும் மக்களின் ரசனை வியப்பூட்டுகிறது. எங்களது காலத்தில் மண்கலத்தில் பாலைக் காய்ச்சுவோம். அந்த பால் நல்ல சுவையாக இருக்கும். அந்தச் சுவையை இன்று மின்சாரம் அல்லது கேஸ் அடுப்பில் காய்ச்சும் பாலில் பெற முடியாது.

  அன்று எங்க வீட்டுப் பெண்ணில் சிருங்கார ரசத்தைக் காண்பித்தோம். அதில் ஓர் எல்லை இருந்தது. நாங்கள் எவற்றை காண்பிக்கக்கூடாது என்று விரும்பினோமோ அவை இப்போது பொழுதுபோக்காக ஆகிவிட்டன. எந்த அளவுக்கு மட்டமான உணர்வு படத்தில் வெளிப்படுத்தப்படுகிறதோ அந்த அளவுக்கு படம் வெற்றி பெறும் நிலைக்கு படவுலகம் தள்ளப்பட்டுவிட்டது.

  என் இளம் பிராயத்தில் எங்கள் கிராமத்தில் சொல்லக்கூடிய கதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது:

  கள் குடித்த குரங்கு ஒன்று போதையுடனேயே பனைமரத்தின்மீது ஏற, அங்கிருந்த தேள் அதைக் கொட்டிவிட... அங்கிருந்து அருகிலிருந்த புளிய மரத்தின்மீது தாவியது. புளியமரத்தில் இருந்த பிசாசு, குரங்கை இறுக பிடித்துக் கொண்டது... குரங்குக்கு எப்போது விடுதலை?

   

  18. விஜயாவின் இளைய தலைமுறை

   

  விஜயா என்னும் ஆலமரத்தில் இரு விழுதுகள் தோன்றின... இப்படிக்கூட சொல்லலாம் என் தந்தையார் போட்ட கோட்டின்மீது நாங்கள் பாதைபோட முயன்றோம் என்று. அதற்கான நேரம் எப்படி உருவானது?

  எஸ்.எஸ். வாசன், ஏவி.எம், ஸ்ரீராமுலு நாயுடு போன்ற பிரபல தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்திப் படத் தயாரிப்பில் ஈடுபட்டபோது, வடஇந்திய திரைப்பட விநியோகஸ்தர்களும் தொழிற்நுட்பக் கலைஞர்களும் என் தந்தையாரிடம், ""நீங்கள் எப்போது இந்திப் படவுலகுக்கு வரப் போகிறீர்கள்?'' எனக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

  இதற்கான பதிலை, என் தந்தையார், "பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா' என்னும் அமைப்பின் தலைவராக இருந்தபோதுதான் தரமுடிந்தது.

  அப்போது "மிஸ்ஸியம்மா' பட (தமிழ், தெலுங்கு) வெற்றியின் அடிப்படையில் அதை இந்தியில் தயாரிக்க திட்டமிட்டு எல்.வி. பிரசாத் இயக்கத்தில் பிரபல இந்தி நட்சத்திரங்கள் ராஜ்கபூர், நர்கீஸ் நாயகன் நாயகியாகவும் தமிழில் கே.ஏ. தங்கவேலு நடித்த கதாபாத்திரத்தில் தேவ் ஆனந்த், ஜமுனா நடித்த வேடத்தில் கல்பனாகார்த்திக் நடிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டு படத்திற்கு பூஜை போடும் வரையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன.

  ஆனால், தமிழ்}தெலுங்கு படங்களில் காண்பிக்கப்பட்ட கலாச்சார உயர்வை இந்திப் படத்தில் காண்பிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்த என் தந்தையார் "மிஸ்ஸியம்மா' இந்திப் படத் தயாரிப்பை கைவிட்டுவிட்டார். அந்தப் படத்தின் இந்திப் பட உரிமையை ஏவி.எம். நிறுவனத்தினருக்குத் தர, அவர்கள் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் ஜெமினி கணேசன், மீனாகுமாரி நடிக்க இந்தியில் தயாரித்து வெளியிட்டனர்.

  அதன் பிறகு இந்தியில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் என் தந்தையாருக்கு வர பத்து ஆண்டுகள் பிடித்தன. அதுவும் "எங்க வீட்டுப் பிள்ளை'யின் வெற்றியுடன் வடஇந்திய படவுலகின் விநியோகஸ்தர்கள், தொழிற்நுட்ப கலைஞர்களின் நெடுநாளைய வேண்டுகோளின்படி இந்தியில் எங்க வீட்டுப் பிள்ளையை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

  என் தந்தையாருடன் சக்கரபாணியார் இணைந்து அளிக்க விஜயாவுக்காக கே.வி.ரெட்டி தயாரித்து இயக்கிய படம் "உமா சண்டி கவுரி சங்கர்ல கதா' (1968) என்ற தெலுங்குப் படம்.

  மக்களின் ரசனை மாறிக்கொண்டேயிருக்க,"மாயாபஜார்', "ஜகதேக வீருனி கதா' படங்களில் தெரிந்த கே.வி.ரெட்டியின் முத்திரையை இந்தத் தெலுங்குப் படத்தில் காண முடியவில்லை.  படம் தோல்வியைத் தழுவியது.

  இந்த ரசனை மாற்றத்தைப் புரிந்துகொண்ட விஜயா நிறுவனம், தெலுங்கில் வெற்றிபெற்ற "ராமுடு பீமுடு' கதையை எம்.ஜி.ஆர். நடிக்க "எங்க வீட்டுப் பிள்ளை' எனத் தமிழில் தயாரித்து மாபெரும் வெற்றிபெற, விஜயா நிறுவனத்தின் தோற்றம் விஜயா இண்டர்நேஷனல் என்ற ஒரு மாற்றத்திற்கு உள்ளானது.

   விஜயாவில் சாணக்யா இயக்குநராகச் சேர்ந்தார். அப்போது ஒளிப்பதிவாளர் மார்க்கஸ் பார்ட்லே விலக, ஏ.வின்சென்ட் "எங்க வீட்டுப் பிள்ளை'யின் ஒளிப்பதிவாளராகப் பொறுப்பேற்றார். புதியவர்கள் பலர் உள்ளே வந்தனர்.

  அந்த சமயத்தில் சக்கரபாணியாருக்கும் உடல் நலம் சரியில்லை. எனவே விஜயா நிறுவனம் இந்திப் படங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டது.

  திலீப்குமார் தமிழ்நாட்டுக்கு மிகவும் தெரிந்த வட இந்திய நடிகர். அவரது தலைமுடிக்கு ஒரு ஸ்டைல். அவரது நடிப்பில் அடக்கமும் தனித்துவமும் இருந்தது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரைப் போல வடநாட்டில் கொடிகட்டிப் பறந்தவர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான நடிகர்.

  "மலைக்கள்ளன்' படத்தை இந்தியில் எடுத்தபோது (தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில்) திலீப்குமார் நடித்தார். "எங்க வீட்டுப் பிள்ளை'யின் இந்திப் பதிப்பில் (ராம் அவுர் ஷ்யாம்) திலீப்குமார் நடித்தால், அவர் இரட்டை வேடத்தில் நடித்த முதல் படம் என்னும் சிறப்பையும் இப்படம் பெறும் எனக் கருதி திலீப்குமாரையே நடிக்க வைப்பதென தீர்மானிக்கப்பட்டது.

  "எங்க வீட்டுப் பிள்ளை'க்கு முன்பிருந்தே ஜெமினியின் படங்களில் நடித்த காலத்திலிருந்தே என் தந்தையாருக்கு அறிமுகமாகி நண்பராகவே திகழ்ந்தார் திலீப்குமார்.

  "நாடோடி மன்னன்' படத்துக்கு முன் ஆஃப் ப்ளோர் என பாதி செட்களில் படமெடுக்கும் முறை இருந்து வந்தது. ஆனால் நாடோடி மன்னனுக்குப் பிறகு முழு செட்களில் படமெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றி பெறவே, அதையே என் தந்தையாரும் "எங்க வீட்டுப் பிள்ளை', "ராம் அவுர் ஷ்யாம்' உட்பட பல படங்களில் பின்பற்றினார். குறிப்பாக வாகினியின் எட்டாவது தளத்தில் ஆர்ட் டைரக்டர் எஸ். கிருஷ்ணாராவ் அவர்களால் ஒரு தெரு செட் தத்ரூபமாகப் போடப்பட்டு படமாக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

  "எங்க வீட்டுப் பெண்' தயாரிப்பின்போது தந்தையாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் அப்படத்தை முடிக்க எம்.ஜி.ஆர். எடுத்த முயற்சி உதவியாக அமைந்தது. ஆனால் இந்திப் படத்தின் தயாரிப்பில் ஈடுபடும் அளவுக்கு என் தந்தையாரின் உடல்நலம் முழுமை பெறவில்லை. சக்கரபாணியாருக்கும் அந்த சமயத்தில் பத்திரிகைப் பணி பளு அதிகம். அவராலும் இந்திப் படத் தயாரிப்பில் ஈடுபட முடியாத நிலை.

  எனவே, இந்திப் படஉலகில் என் தந்தையார், சக்கரபாணியார் ஆகிய இருவரின் பணியையும் ஒருவரே நடத்த முடியும் என அவர் அழைக்கப்பட்டார்.

  யார் அவர்?

  என் தந்தையார் சொல்லக் கேட்போம்:

   

  ""பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று சொல்வார்கள். அதைவிட பழையவர்கள் எனப்படும் அனுபவசாலிகளின் அடிச்சுவட்டை புதியவர்கள் பின்பற்றி பாதை மாறாத பயணத்தைத் தொடரலாமே என்று தீர்மானித்தேன்.

  அப்போது என் நினைவுக்குள் வந்தவர் என் மூத்த மகன் பி.எல்.என். பிரசாத். அவர் பிரசாத் பிராசஸ் அச்சகத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு சாதனை படைத்து வருபவர். திரை உலகில் ஏற்கெனவே ஒளிப்பதிவாளராக பயிற்சி பெற்றவர். சக்கரபாணியின் நம்பிக்கையையும் பெற்றவர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கேற்ப எங்களுடைய எண்ணங்களுக்கு செயல்வடிவம் தருவார் என இந்திப் பட தயாரிப்பு பணியை பிரசாத் வசம் ஒப்புவித்தேன். தயாரிப்புடன் நடிக,நடிகையர் தேவைகளையும் அவரே ஒட்டு மொத்தமாகப் பொறுப்பேற்று செவ்வனே செய்தார்.

  படத்தில் நடிப்பவர்கள் மனதில் குறைபாடு இருந்தால் அவர்களிடமிருந்து சிறந்த நடிப்பைப் பெற முடியாது. அவர்கள் இயல்பாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று நான் கூறியபடி, "ராம் அவுர் ஷ்யாம்' படப்பிடிப்பு சமயத்தில்தான் திலீப்குமார் - சாய்ராபானு திருமணம் நடந்தது. திலீப் தேனிலவுக்குக்கூட செல்லாமல் படப்பிடிப்புக்கு மனைவியையும் உடன் அழைத்து வந்தது "ராம் அவுர் ஷ்யாம்' படத்தில் அவருக்கிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தியது. திலீப்குமார் ஷுட்டிங் என சென்னைக்கு வரும்போது, சாய்ரா பானுவையும் அழைத்து வந்து தங்க, சென்னை வளசரவாக்கத்தில் கறீம் பீடி தோட்ட பங்களாவை, அவர்களது அனுமதி பெற்று, திலீப்குமார்  சாய்ரா தங்குவதற்காக சகல வசதிகளையும் பிரசாத் செய்திருந்தார்.

  திலீப்}சாய்ராவுக்கு மட்டுமல்ல வசதி, வாய்ப்புகளை படத்தில் சம்பந்தப்பட்ட அத்துணை கலைஞர்களுக்கும் வழங்கினார்.

  திலீப்குமார், தாம் நடிக்கும் படங்களில் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவார். ஆனால் நமது எம்.ஜி.ஆர். முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வார்... இருவருக்கும் இருந்த ஒரே ஒரு வேறுபாடு இதுதான்.

  இந்த சந்தர்ப்பத்தில் "ராம் அவுர் ஷ்யாம்' படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். திலீப்குமாருடன் இணைந்து நடிக்க வைஜயந்திமாலா (சரோஜாதேவி வேடம்) வஹிதா ரஹ்மான் (ரத்னா ஏற்ற வேடம்) நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். ஆனால் இந்தப் படப்பிடிப்புக்காக ஒதுக்கப்பட்ட தேதிகளில் குளறுபடி ஏற்பட்டு ஷெட்யூல்படி ஷூட்டிங் நடைபெறவில்லை. இதனால் மீண்டும் திலீப்குமாரிடம் ஷூட்டிங் தேதிகளைப் பெற்று வைஜயந்திமாலாவை அணுகியபோது துரதிர்ஷ்டவசமாக அப்போது அவரது தேதிகள் இணைந்து வரவில்லை. எனவே வைஜயந்திமாலா ஏற்க வேண்டிய வேடத்தை படத்தில் இரண்டாம் நாயகியாக இருந்த வஹிதா ரஹ்மான் ஏற்று, முதல் கதாநாயகியானார்.

  வாழ்நாளில் திலீப்குமாருடன் ஒரு படத்திலாவது நடிக்க மாட்டோமா என்று காத்துக் கொண்டிருந்த மும்தாஜ் படத்தின் இரண்டாவது கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

  என் மூத்த மகன் பிரசாத் இந்திப்பட வேலைகளை அதிகாலையில் ஆரம்பித்து கவனிப்பதில் முதல் நபராக இருந்தார். அன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் மாலையில் திலீப்புடன் புறப்பட்டு "கறீம் பீடி' பங்களாவுக்குச் சென்று அடுத்த நாள் படப்பிடிப்பு விஷயங்களைப் பற்றி திலீப்குமார், இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆகியோருடன் கலந்தாலோசித்தபின் ஸ்டூடியோவுக்கு வந்து அடுத்த வேலைகளைக் கவனிப்பார். அந்த அளவுக்கு ராம் அவுர் ஷ்யாம் படத்தில் அவரது ஈடுபாடு இருந்தது...

  "எங்க வீட்டுப் பிள்ளை' படப்பிடிப்பு சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவராக... அவரது நண்பராக பழகியதினால்... ஏறத்தாழ எம்.ஜி.ஆரின் குணநலன்களைப் பெற்றிருந்த திலீப்புக்கும் பிரசாத்தைப் பிடித்துப் போயிற்று. நாளடைவில் பிரசாத்தை "நவாப் ஆஃப் மெட்ராஸ்' என்று செல்லமாக அழைத்து மகிழ்ந்தார் திலீப்.

  "எங்க வீட்டுப் பிள்ளை' யைவிட "ராம் அவுர் ஷ்யாம்' படத்தின் நீளம் அதிகமாகிவிட்டது. எனவே படத்தின் நீளத்தைக் குறைத்து கதையில் வேகத்தைக் கூட்ட, சக்கரபாணியும் நானும் எடிட்டிங் டேபிளில் அமர்ந்து எடிட் செய்தோம். இதில் ஒரு பாடல் காட்சி வெட்டப்பட்டது. அந்த பாடல் காட்சியைச் சேர்க்க வேண்டும் என பிரசாத் வாயிலாகவே கோரிக்கை விடப்பட்டது. படம் வெளியாகி, ஹிட்ஆன பின்பு ஐந்து வாரங்கள் கழித்தே அப்பாடல் காட்சி இணைக்கப்பட்டது.

  படவுலகில் முதன்முறையாக "ராம் அவுர் ஷ்யாம்' படத்தின் நெகடிவ் இன்ஷ்யூர் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. "ராம் அவுர் ஷ்யாம்' குறிப்பிட்ட நாளில் முடிக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் வெளியானது என்றால் அதற்கு பிரசாத் ஏற்ற முழுப் பொறுப்பும் தந்த உழைப்பும்தான் காரணம். கடமை உணர்வுடன் இன்னும் சொல்லப்போனால் நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக பணியாற்றி இருந்தார் பிரசாத்.

  இதனால் இந்திப் படவுலகில் பிரசாத்தின் மதிப்பும் மரியாதையும் கூடி, பெருமளவுக்கு உயர்ந்தது. "ராம் அவுர் ஷ்யாம்' படம் பெருவெற்றியைப் பெற்று சாதனை புரிந்தது. அதனால் என் கவனமெல்லாம் இந்திப் படவுலகின் பக்கம் திரும்பியது.

  பிரசாத் தோள்கொடுத்து சுமக்க, விஜயா பேனரில் தயாரிக்கப்பட்ட தமிழ், தெலுங்குப் படங்கள் இந்தியில் படமாக்கப்பட்டன. நன்ஹா ஃபரிஷ்தா (குழந்தைக்காக), கர் கர் கி கஹானி (நம் குழந்தைகள்), ஜூலி (சட்டைக்காரி மலையாளம்), யெஹி ஹை ஜிந்தகி (கலியுகக் கண்ணன்),

  ஸ்வர்க் நரக் (சொர்க்கம் நரகம்), ஸ்வயம்வர் (மனிதன் மாறவில்லை), ஸ்ரீமான் ஸ்ரீமதி (தாயாரம்மா பங்காரய்யா) ஆகிய இந்திப் படங்களை 1967- 82 ஆண்டுகளில் தயாரித்தேன். விஜயா நிறுவனத்தின் தனித்துவமான கலாச்சாரம் இந்தப் படங்களிலும் இடம்பெற்றது. இந்தப் படங்களிலும் பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. வன்முறை, ஆபாசத்தை அனுமதிக்கவில்லை.

  "யெஹி ஹை ஜிந்தகி' படத்திலிருந்து, எங்களது இந்திப் படங்களின் தயாரிப்புப் பணிகளில் தொடர்ந்து இந்தி நடிகர் சஞ்சீவ் குமாரும் ஈடுபட்டு எங்களது யூனிட்டில் ஒருவராகவே பணியாற்றி வந்தார் என்பதும், பிரசாத்தும் சஞ்சீவ் குமாரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  இந்திப் படத்தை எடுத்துவிட்டோம். அது மக்களை சரியாகச் சென்றடையப் பொருத்தமாக விளம்பரம் செய்யவேண்டும் என அதுவரையில் இல்லாத ஒரு முறையைக் கொண்டு வந்தோம். அதாவது சினிமா விளம்பரங்களுக்கு அட்வர்டைசிங் ஏஜென்ஸி என்னும் விளம்பர நிறுவனத்தையே ஏற்படுத்தினோம். அதற்கு என் இரண்டாவது மகன் வேணு, மூன்றாவது மகன் விஸ்வம் ஆகியவர்களை பிரசாத் நியமித்துக் கொண்டார். அவர்களும் தேசிய நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு, திரைப்பட விளம்பரத்தில் புது யுக்திகளைத் தந்தனர். அவர்களுக்கு உதவியாக ஆர்ட் டைரக்டராக சிசிர் தத்தாவும் ஓவியர் ஈஸ்வரும் பணியாற்றினர்.

  அப்போதுதான் சினிமா போஸ்டர்கள் புதுவடிவம் பெற்று, பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த விளம்பர டிசைனை உருவாக்கியவர் யார் என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு சினிமா போஸ்டர் மற்றும் விளம்பரக் கலை வளர்ந்தது.

  இந்த நாட்களில்தான் திரையுலகில் பரீட்சார்த்தமான படங்களைத் தயாரிக்க வேண்டும் என இன்னொரு புதிய யூனிட் உருவானது. அதில் என் மகன்களுடன் "ராமுடு பீமுடு' தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளர் டி.ராமா நாயுடு இணைய விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் 1967ல் ஏற்படுத்தப்பட்டது. அவர்களது முதல் படமாக பாபகோசம் (தெலுங்கு), குழந்தைக்காக (தமிழ்) படங்கள் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றன. விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் "வசந்த மாளிகை' உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்தது...

  டி.ராமா நாயுடு தனிப்பட்ட தயாரிப்பாளராக விரும்பியபோது, பிரேம் நகர் (இந்தி வசந்த மாளிகை) படத்தைத் தயாரிக்க, அதை பி.நாகிரெட்டி அளிக்கும் என திரையிடச் செய்தேன். அதன்பின் டி. ராமாநாயுடு, அகில இந்திய அளவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளராக உயர்ந்தார்.

  சக்கரபாணியும் நானும் இணைந்து நிறுவிய சந்தமாமா பப்ளிகேஷன்ஸ், குழந்தைகளின் பத்திரிகையான சந்தமாமா இதழை 12 இந்திய மொழிகளில் வெளியிட்டு, வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த சமயத்தில் அதன் சார்பு நிறுவனமாக டால்டன் பப்ளிகேஷன்ஸ், என் மகன்களால் நிறுவப்பட்டு (1966ல்) திரைப்பட இதழ்களான பொம்மை (தமிழ்),

  விஜயசித்ரா (தெலுங்கு, கன்னடம்), மங்கை (தமிழ்), வனிதா (தெலுங்கு, கன்னடம்), ஆங்கிலத்தில் பால்கன், ஹெரிடேஜ், வால்ட் டிஸ்னி காமிக்ஸ் ஆகிய இதழ்களை வெளியிட்டனர்.

  சந்தமாமா டால்டன் நிறுவனத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 30 இதழ்கள் வெளியாகின. நாளொன்றுக்கு ஒரு இதழ் என்று வெளிவந்தது.

  எனக்கு நீண்ட நாட்களாகவே நாளேடு நடத்த விருப்பம். அந்த விருப்பத்தை மாதம் ஒரு இதழ் என வெளியிட்டு, என் மகன்கள் நிறைவேற்றினர்.

  பிரபல எழுத்தாளர், ஆங்கில நாவலாசிரியர் குஷ்வந்த்சிங் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார்:

  நாளேட்டைவிட நாள்தோறும் ஒரு இதழை வெளியிடுவது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் பி.நாகிரெட்டி அவர்கள், அவர்தம் வாரிசுகளின் வாயிலாக தினம் ஒரு இதழ் வெளியிட்டு சாதனை படைத்திருக்கிறார்...

  இப்படியாக விஜயாவின் இளைய தலைமுறையினர் திரைப்படம், அச்சகம், பத்திரிகைத் துறைகளில் ஈடுபட்டு சாதனை வரிசையில் இடம் பிடித்தனர்...

  இந்தக் காலகட்டத்தில்தான் எம்.ஜி.ஆர். என் தந்தையாரைச் சந்தித்து விஜயா பேனரில் தாம் நடிக்க இரண்டாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்...

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai