சுடச்சுட

  

  பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் - 76 ஆனந்தனா? ஆநந்தனா?

  By கவிக்கோ ஞானச்செல்வன்  |   Published on : 20th September 2012 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kk8

  "விஷய சூசிகை' யும் சதுரகராதியும்

  பொருளடக்கம், உள்ளடக்கம், உள்ளுறை, உள்ளேயிருப்பவை எனப் பலவாறாக இன்று நாம் புத்தகங்களில் குறிப்பிடுகிறோமே, அதுதான் விஷய சூசிகை. விஷயம் - பொருள்; சூசிகை - குறிப்பு. (பொருள் குறிப்பு - பொருளடக்கம்). சூசகமாக என்னும் சொல் இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாகச் சொல்லுதல் என்பதே இதன் பொருள்.

   இப்போது எதற்காக இந்த விஷய சூசிகை? சதுரகராதிப் புத்தகத்தை எடுத்துப் பிரித்தபோது முதலில் விஷயசூசிகை கண்ணிற்பட்டது. வீரமாமுனிவரால் தமிழுக்கு அளிக்கப்பட்ட கொடை இந்நூல். "அ' வை (அகரத்தை) முதலாக உடையவற்றின் பொருள் குறிப்பதே அகராதி. (அகரம் முதலாக - அகரம்+ஆதி) ஆதி, அந்தம் எனும் வட சொற்களுக்கு முதல், முடிவு என்பன தமிழ்ச் சொற்கள். ஆதலின் அகராதியை இந்நாளில் அகரமுதலி என்று குறித்தல் காண்கிறோம். முன்னர் கண்ட விஷயம், சூசிகை என்பனவும் வட சொற்களே.

   தமிழில் நிகண்டு எனும் நூல் உண்டு. சொற்களின் பொருளறிய உதவும் நூல்  இது. நிகண்டு கற்றுச் செய்யுள் ஆராய்ச்சி உடையவரே நன்னூல் இலக்கணம் கற்கத் தகுதியுடையவர் ஆவார். ஒரு பொருளமைந்த சொற்களை அடுக்கிச் செய்யுள் வடிவத்தில் தந்திருப்பதே நிகண்டு. பதினோராம் நிகண்டு வரை இருப்பதாக அறிந்துள்ளோம். பழைய நாளில் அகராதிகள் இல்லை. (இக்காலத்தில் அதிகம் பேசுபவரை அகராதி என ஏசுகின்றனர்)

   வீரமாமுனிவர் தாம் முதலில் தமிழில்  அகராதி தந்தவர். அதிலும் சிறப்பாக சதுர் அகராதி தந்தவர் அவர். (சதுர்=நான்கு). பெயரகராதி, பொருளகராதி, தொடையகராதி, தொகையகராதி என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டதனால் சதுரகராதி எனப் பெயரிட்டார். (சுதர்வேதம் - நான்மறை)

  பெயரகராதியில் சில எடுத்துக் காட்டுகள்:

   அகத்தியன் - கும்பமுனி, குறுமுனி, முத்தமிழுடையோன்

   அழுக்கு- மலம், மாசு

  பொருளகராதியில் சில எடுத்துக்காட்டுகள்:

   ஆக்கம் - இலக்குமி, இலாபம், செல்வம், பொன், எழுச்சி, படை வகுப்பு.

   உருவிலி - மன்மதன்

   கள்ளல் - களவு

  தொகையகராதியில் சில எடுத்துக்காட்டுகள்:

   அங்கம் - மலை,யாறு, நாடு, ஊர், மாலை, பரி, கரி, முரசு, கொடி, செங்கோல் இவை அரசர்க்குரிய தசாங்கம்  (தசாங்கம் - பத்து அங்கங்கள்)

   சதுரங்கம் - தேர், கரி, பரி, காலாள் (கரி - யானை, பரி - குதிரை)

   (ரத, கஜ, துரக, பதாதி - வடமொழித் தொடர்)

  பஞ்சாங்கம் - திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.

  (சோதிடத்தில் பயன்படும் ஐந்து அங்கங்களே - பஞ்சாங்கம்)

  அங்கம் - உறுப்பு, பிரிவு.

  தொடையகராதியில்

  சில எடுத்துக் காட்டுகள்:

  (இரண்டாம் எழுத்து ஒன்றாக வருவது எதுகைத் தொடை)

  அகடம் - பொல்லாங்கு

  விகடம் - வேறுபாடு

  சகடம் - வண்டி

  (விகடம் இக்காலத்தில் நகைச்சுவை எனும் பொருளில் பயன்பாட்டில் உள்ளது.)

  இகத்தல் - கடத்தல், போதல்

  முகத்தல் - மொள்ளல்

  உகத்தல் - உயர்த்தல்

  (இந்தத் தொடையகராதி படிப்பதற்குச் சுவையாக ஆர்வம் எழப்பக் கூடியது. சான்றாக எடுத்துக்காட்டுகளைக் காண்போம்)

  அச்சு - அடையாளம், உயிர், பண்பு

  கிச்சு - செருப்பு (நாம் கிச்சுக்கிச்சு என்று சிரிப்பூட்டுதலைச் சொல்கிறோம்)

  குச்சு - குற்றி (குச்சி). சிறுகுடில் (குடிசை), பாவாற்றி (தறியில்)

  தச்சு - தச்சுத் தொழில்

  நச்சு - ஆசை, விடம், நச்சென்னேவல் (ஏவல்)

  பிச்சு - பித்து

  மச்சு - குற்றம், மேனிலை (மேல்வீட்டை மச்சு என்போம்)

  ஊராண்மை - மிக்கச் செயல்

  ஏராண்மை - உழவு

  பேராண்மை - அரிய செயல்

  பாராயணம் - நியமமாகப் படித்தல்

  நாராயணம் - அரசமரம், ஒருபநிடதம்,மீன்.

  அடைப்புக்குறிக்குள் இருப்பவை கட்டுரையாசிரியர் எழுதியவை.

  இவ்வகராதியில் சில மாறான பொருள் தருவனவும் உண்டு. ஆகாரம் எனும் சொல்லுக்கு உறைவிடம் என்று எழுதப்பட்டுள்ளது. ஆகாரம் - உணவு என்பதே நாம் கொண்டுள்ள பொருள். சந்தோஷம் - மகிழ்ச்சி; ஆநந்தம் - பேரின்பம் என்று சுட்டப்பட்டுள்ளன. இரண்டு வட சொற்களுக்குத் நல்ல தமிழ் தந்துள்ளார். ஆநந்தன் - அருகன், சிவன், கடவுள் என்று எழுதியுள்ளார். (கடவுள் பொதுப்பெயர், அருகன் சமணக் கடவுள், சிவன் -சைவக் கடவுள்) ஆனந்தன் என எழுதிடாமல் ஆநந்தன் எனத் தந்நகரம் இடுதல் சரியென இதன்படி அறியலாம்.

  (தமிழ் வளரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai